ஊதியூர் அருகே காவிரி கூட்டுகுடிநீர்த் திட்ட குழாய் உடைப்பு தண்ணீர் வீண்
ஊதியூர் அருகே, காவிரி கூட்டுகுடிநீர் திட்ட பைப்லைனிலில் கசிவு ஏற்பட்டு கடந்த 6மாத காலமாக தண்ணீர் வெளியேறி லட்சணக்கான லிட்டர் வீணாகியுள்ளது. காவிரி கூட்டுகுடிநீர் திட்டம் மூலம் கொடுமுடியில் ஓடும் காவிரி ஆற்றிலிருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு பைப்லைன் மூலம் முத்தூர், காங்கயம், ஊதியூர், குண்டடம் பகுதிகளுக்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்களுக்கு சப்ளை செய்யப்படுகிறது. பொதுவாகவே காவிரி கூட்டுகுடிநீர் திட்ட பைப்லைன்களில் அவ்வவ்போது உடைப்பு ஏற்பட்டு கசிவதும் பின்னர் அவை சரிசெய்யப்படுவதும் தொடர்ந்து நடந்து வரும் ஒன்றாகும். இந்த நிலையில் குண்டடம் பகுதிக்கு செல்லும் பைப்லைனில் ஊதியூர் பெட்ரோல் பகுதியிலிருந்து குண்டடம் பிரிவு வரை ஆங்காங்கே தண்ணீர் கசிந்து வெளியேறி குட்டைபோல தேங்கி வருகிறது. கடந்த 6மாத காலமாக லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணாகியிருக்கிறது. தண்ணீர் கசிந்து வெளியேறிய இடங்களில் புதர்கள் முளைத்து வளர்ந்துள்ளதால், சில இடங்களில் தண்ணீர் கசிவது தெரியாத நிலை உள்ளது. வெயில் காலம் துவங்கி தண்ணீர் பிரச்சினை தலைதூக்கத் தொடங்கியுள்ள இந்த நேரத்தில் தண்ணீர் கசிந்து வீணாவது பொதுமக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் தண்ணீர் வெளியேறும் இடங்களை கண்டறிந்து சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story



