மாவட்ட நிர்வாகத்தில் இருந்து பேசுவதாக கூறி பணம் கேட்ட மர்மநபர்... அதிகாரி தான் பேசுகிறார் என்று நம்பி பணம் அனுப்பிய ஊராட்சி செயலாளர்கள்

மோசடி
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி மற்றும் கடமலை மயிலை ஒன்றியத்தில் மொத்தம் 48 ஊராட்சிகள் உள்ளது. தற்போது உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவி காலம் முடிவுற்ற நிலையில் அனைத்து ஊராட்சிகளும் செயலர்களின் கண்காணிப்பில் இயங்கி வருகிறது. இந்த நிலையில் ஆண்டிப்பட்டி மற்றும் கடமலை-மயிலை ஒன்றியத்தில் பணியாற்றும் 30க்கும் மேற்பட்ட ஊராட்சி செயலாளர்கள் நேற்று பலருக்கும் ஒரு செல்போன் அழைப்பு வந்துள்ளது. தொலைபேசியில் பேசிய நபர், தேனி மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில் இருந்து பேசுவதாக தெரிவித்துள்ளார். ஊராட்சிகளில் வீட்டு வரி, சொத்து வரி வசூல், குடிநீர் வசூல் அனைத்தும் எவ்வளவு செய்யப்பட்டுள்ளது? வளர்ச்சிப் பணிகள் நிலை என்ன? உங்கள் பகுதியில் கலெக்டர் ஆய்வு நடைபெற உள்ளது என கூறியுள்ளார். அதன் பின்னர் தனக்கு அவசர தேவை இருப்பதாகவும், சில ஊராட்சி செயலாளர்களிடம் தனது மனைவிக்கு உடல்நலம் சரியில்லை என்றும் கூறி, தொடர்பு கொண்ட செல்போன் எண்ணில் கூகுள் பே மற்றும் போன்பே மூலமாக ரூ.5 ஆயிரம் அனுப்பி வைக்கும் படி கேட்டுள்ளார். ஒவ்வொரு ஊராட்சியிலும் பணியாற்றும் ஊராட்சி செயலாளர்கள் மற்ற ஊராட்சி செயலாளர்களிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர்களுக்கும் இதே போன்ற அழைப்பு வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளதால், யாரோ மோசடி பேர்வழி பணம் பறிப்பதற்கு முயற்சி செய்கிறார் என தெரியவந்தது. இதற்கிடையே பேசிய நபர் உண்மையிலேயே ஊரக வளர்ச்சித் துறை அலுவலகத்தில் இருந்து தான் பேசுவதாக நம்பி ஒரு சில ஊராட்சி செயலாளர்கள், அந்த நபர் பேசிய செல்போன் எண்ணிற்கு பணமும் அனுப்பி உள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்த செல்போன் எண்ணை கொண்டு மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளிக்க ஊராட்சி செயலாளர்கள் முடிவு செய்துள்ளனர். தேனி மாவட்டம் முழுவதும் ஊராட்சி செயலாளர்களிடம் மோசடி செய்யும் நோக்கத்தில் மர்ம நபர் செல்போனில் பேசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story