கோடை காலத்தில் உடல் வெப்பத்தை தணிக்கும் ஆற்றல் உடைய நுங்கு

X
தமிழ்நாடு மாநிலத்தின் மரமாக, பனை மரம் விளங்குகிறது. கடும் வறட்சியான நிலப்பரப்பிலும் செழுமையாக வளரும் பனை மரத்தின் அனைத்துப் பொருள்களும் மக்களுக்கு பயன் தருகின்றன. கோடைக்காலத்தில் கிடைக்கும் நுங்கு மிகவும் சுவையாக இருப்பது மட்டுமின்றி, நுங்கில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. குறிப்பாக, கோடையில் உடலுக்கு வேண்டிய நீர்ச்சத்துக்களை இது தன்னுள் அதிகம் உள்ளடக்கியுள்ளது. உடலின் கனிமச்சத்து மற்றும் சர்க்கரையின் அளவை சீராக வைத்து, சுறுசுறுப்புடன் செயல்படுவதற்கு நுங்கு பெரிதும் உதவியாக இருக்கிறது. அதுமட்டுமின்றி, வைட்டமின் பி, இரும்புச் சத்து, கால்சியம், ஜிங்க், பொட்டாசியம் போன்ற பல்வேறு சத்துக்களும் உள்ளன. நுங்கில் அடங்கியுள்ள சத்துக்கள் உடலுக்கு ஆரோக்கியத்தை தருகின்றது. மேலும், நுங்கு உடல்வெப்பத்தை தணிக்கும் ஆற்றல் உடையது. கோடைக்காலத்தில் குளிர்பானத்தை அருந்துவதை விட, நுங்கு சாப்பிடுவது உடல்நலத்திற்கு மிகவும் நல்லது. மேலும், கொழுப்பைக் கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்கும் ஆற்றல் கொண்டதாக உள்ளது. நாகை மாவட்டத்தில், நாகை, திருமருகல், நாகூர், கீழ்வேளூர், புத்தூர், வேளாங்கண்ணி, வேதாரணயம், தலைஞாயிறு உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், தற்போது பனை நுங்கு சீசன் தொடங்கியுள்ளது. 5 நுங்கு ரூ.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பனை நுங்கு குணாதிசயங்களை அறிந்த பொதுமக்கள் கண்டவுடன் வாங்கி சாப்பிடுகின்றனர். வெளுத்து வாங்கும் வெயிலுக்கு, சாப்பிடுவதற்கு இதமாக இருக்கும் இயற்கை பனை நுங்கை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்வதால் இதன் விற்பனை சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
Next Story

