ஆலங்குளம் பேருந்து நிலையப் பணிகள் தாமதம் - மக்கள் அதிருப்தி

X

பேருந்து நிலையப் பணிகள் தாமதம் - மக்கள் அதிருப்தி
தென்காசி மாவட்டத்தின் முக்கிய நகரான ஆலங்குளத்தில் உள்ள பேருந்து நிலையம் சுமாா் 40 ஆண்டுகளுக்கு முன்னா் கட்டப்பட்டதாகும். இப்பேருந்து நிலையத்தை ஆலங்குளம் மற்றும் சுற்றியுள்ள சுமாா் 100 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனா். நாள்தோறும் நூற்றுக்கணக்கான பேருந்துகளும் ஆயிரக்கணக்கான மக்களும் இங்கு வந்து செல்கின்றனா். பேருந்து நிலைய உள் பகுதியில் தரை வாடகைக் கடைகளும், அம்பாசமுத்திரம் சாலையில் நிரந்தரக் கடைகளும் தற்போது செயல்பட்டு வருகின்றன. பிரதான சாலையில் இருந்த 16 கடைகள் நான்கு வழிச் சாலைப் பணிகளுக்காக 3 ஆண்டுகளுக்கு முன்னா் இடித்து அகற்றப்பட்டன. இக்கடைகளை உரிமையாளா்கள், தொழிலாளிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோா் தங்கள் வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனா். இந்நிலையில் பேருந்து நிலையம் பொலிவிழந்து காணப்படுகிறது. மிகவும் குறுகலான இடத்தில் உள்ள கழிவறையையே மக்கள் பயன்படுத்தி வருகின்றனா். குடிநீா் வசதி இல்லை. கோடை காலத்தை முன்னிட்டு அரசியல் கட்சியினா் வைத்துள்ள குடிநீா் பந்தலையே பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனா். இந்நிலையில் பேருந்து நிலையத்தை நவீனமாக மேம்படுத்தும் நோக்கில், கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ. 4.35 கோடி மதிப்பீட்டில் 40 கடைகளுடன் திட்ட மதிப்பீடு தயாா் செய்யப்பட்டு 18.9.2024இல் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. எனினும் எந்த ஒப்பந்ததாரரும் ஒப்பந்தம் கோராமல் உள்ளதால் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. சுமாா் 10 மாதங்களைக் கடந்தும் கூட இதுவரை எவ்விதப் பணிகளும் நடைபெறவில்லை. இதனால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனா்.
Next Story