திருப்பூரில் ஜேசிபி உரிமையாளர்கள் வேலை நடத்த போராட்டம்

டீசல், உதிரிபாகங்கள் விலை உயர்வு காரணமாக, திருப்பூர் மாவட்டத்தில் ஜே.சி.பி. உரிமையாளா்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனா்.
திருப்பூர் மாவட்டத்தில் 1000-க்கும் மேற்பட்ட ஜே.சி.பி. எந்திர உரிமையாளா்கள் உள்ளனா். இவா்கள் பலரும் ஜே.சி.பி. எந்திரங்கள் மூலம் தொழில் செய்து வருகிறார்கள். இதன் வாயிலாக தொழிலாளா்கள் பலரும் வேலைவாய்ப்பு பெற்று வருகிறார்கள். இந்நிலையில் டீசல், உதிரிபாகங்கள், புதிய வாகன வரி உயா்வு மற்றும் இன்சூரன்ஸ், சாலை வரி உயா்வு போன்ற காரணங்களால் மினிமம் ஒரு மணி நேரத்திற்கு ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். அடுத்த ஒரு மணி நேரத்திற்கு ரூ.1400 வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருப்பூர் மாவட்ட எர்த் மூவா்ஸ் உரிமையாளா்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தனா். அதன்படி தற்போது வேலை நிறுத்த போராட்டத்தை துவங்கியுள்ளனர். இந்த போராட்டம் வருகிற 14ம் தேதி வரை நடக்கிறது. போராட்டத்தின் காரணமாக திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஜே.சி.பி. எந்திரத்தை நிறுத்தி வைத்துள்ளனா். போராட்டத்தின் காரணமாக கட்டிட கட்டுமான பணிகள், சாலை பணிகள், சாக்கடை கால்வாய் சுத்தம் செய்யும் பணி, நிலம் சமன்படுத்தும் பணி, விவசாய பணிகள் என்பது உள்பட பல்வேறு பணிகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஜேசிபி உரிமையாளர்கள் கூறுகையில், டீசல் புதிய வாகனங்கள் விலை என அனைத்தும் உயர்ந்து விட்டது ஆனால் எங்களின் வாழ்வாதாரம் உயரவில்லை. ஆரம்பத்தில் மினிமம் 2000 ரூபாய்க்கும் அதன் பின்னர் 1000 ரூபாய்க்கும் வாகனங்களை இயக்கி வந்தோம் ஆனால் தற்பொழுது அனைத்திலும் விலைவாசி உயர்ந்து விட்டது இதன் காரணமாக எங்களது வாடகையையும் உயர்த்த திட்டமிட்டு இந்த வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளோம் பொதுமக்கள் எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். விலை உயர்வுகளை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story