ஆறுகள் வாய்க்கால்கள் மற்றும் ஓடைகள், கிளை வாய்க்கால்களில் தூர்வாரும் பணி
பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்பு தூர்வாரும் பணிகளின் கீழ் 15 பணிகளின் மூலமாக ரூ.211 லட்சம் மதிப்பீட்டில் ஆறுகள் வாய்க்கால்கள் மற்றும் ஓடைகள், கிளை வாய்க்கால்களில் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்படவுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் கிரேஸ் பச்சாவ் தகவல். பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டத்திற்குட்பட்ட, கீழக்குடிக்காடு கிராமத்தில், நீர்வளத்துறையின் சார்பில் சிறப்பு தூர்வாரும் பணியின் கீழ் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் அத்தியூர் ஏரியின் வரத்து வாய்க்கால் தூர்வாரும் பணியினை இன்று (11.04.2025) தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது பெரம்பலூர் மாவட்டத்தில் நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் 73 ஏரிகளும் 33 அணைக்கட்டுகளும் மற்றும் 5 ஆறுகளும் உள்ளன. கடந்த 06.03.2025 அன்று தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை அரசாணை 2டி இன் படி, காவேரி டெல்டா மாவட்டங்களில், சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் பாசன அமைப்புகள் ஆதாரங்களை தூர்வார நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அவ்வாறாக பெரம்பலூர் மாவட்டத்தில் ஆறுகள், வரத்து வாய்க்கால்கள், பாசன வாய்க்கால்கள், உபரி நீர் வாய்க்கால்கள், ஓடை மற்றும் வடிகால்கள் முட்புதர்கள் மண்டியும், தூர்ந்தும் உள்ள பகுதிகளில் சிறப்பு தூர்வாரும் பணிகளின் கீழ் பெரம்பலூர் மாவட்டத்தில் 15 பணிகளின் மூலமாக ரூபாய் 211 லட்சம் மதிப்பீட்டில் 39.50 கி.மி தூரத்தில் தூர்வாரும் பணிகள் நடைபெற உள்ளது. அதன் தொடக்கமாக இன்று குன்னம் வட்டத்திற்குட்பட்ட கீழக்குடிகாடு கிராமத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் அத்தியூர் ஏரி வரத்து வாய்க்கால் 5,500 மீட்டர் நீளம் வாய்க்கால் தூர் வாரும்பணி இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இப்பணியின் காரணமாக, வாய்க்கால் முழுவதும் முட்புதர்கள் அகற்றப்படும், பக்கரை வலுப்படுத்தப்படும், இதனால் வாய்க்கால் ஓரங்களில் உள்ள விவசாய நிலங்கள் பாதுகாக்கப்படும். மேலும் நீர்வரத்து மற்றும் வெளியேற்றம் திறன் அதிகரிக்கப்படும் இதனால் இப்பகுதியில் உள்ள விவசாய உற்பத்தி பொருள்கள் அதிகரிக்க ஏதுவாகவும் இச்சிறப்பு தூர்வாரும் பணி இருக்கும். இப்பணிகளை குறித்த காலத்திற்குள் திட்ட மதிப்பீட்டில் உள்ளவாறு தரமாகவும், விரைவாகவும், மேற்கொள்ள நீர் வளத்துறை பொறியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு தெரிவித்தார் இந்நிகழ்வின் போது நீர்வளத்துறை செயற்பொறியாளர் மு.பாண்டியன் உதவி பொறியாளர்கள் தி.தினகரன் கமலக்கண்ணன் பார்த்திபன், குன்னம் வட்டாட்சியர் கோவிந்தம்மாள் நீர்வளத்துறை அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story




