குப்பைகளை அகற்ற மக்கள் கோரிக்கை

மதுரை சோழவந்தானில் குப்பைகளை அகற்றாததால் துர்நாற்றம் வீசும் நிலை காணப்படுகிறது.
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது .சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். இந்த நிலையில் பேரூராட்சியின் பல்வேறு பகுதிகளில் குப்பைகள் தேங்கி கிடப்பதால் சுகாதாரக் கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். ஒரு வாரத்திற்கு மேல் அள்ளப்படாத நிலையில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழை காரணமாக குப்பைகளில் மழைநீர் தேங்கி துர்நாற்றம் வீசும் அவலம் ஏற்பட்டு வருகிறது. பேரூராட்சிக்கு உட்பட்ட 6வது வார்டு சங்கங்கோட்டை பகுதியில் பேரூராட்சி கழிப்பறை முன்பு குப்பைகள் மலை போல் தேங்கி கிடக்கிறது. இது குறித்து பேரூராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை புகார் அளித்தும் குப்பைகளை அள்ளுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் குப்பைகளில் மழைநீர் கலந்து துர்நாற்றம் வீசுவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்படுவதாக பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். ஆகையால் பொதுமக்கள் நலன் கருதி தேங்கிக் கிடக்கும் குப்பைகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
Next Story