கோவை: குளத்தின் நடுவே சிக்கிய குரங்கு - பத்திரமாக மீட்பு!

குளத்திற்குள் சிக்கி தவித்த குரங்கு பத்திரமாக வனத்துறையால் மீட்கப்பட்டது.
நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே உள்ள புதுப்பாளையத்தில் பரிதாபகரமான சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. அப்பகுதியில் உள்ள அணைக்கட்டில் தேங்கியிருந்த சாக்கடை நீர் மற்றும் அடர்ந்த ஆகாயத் தாமரை செடிகளுக்குள் குரங்கு ஒன்று தவறி விழுந்து வெளியேற முடியாமல் தவித்தது. நேற்று முன்தினம் காலை 6 மணி முதல் குளத்தின் நடுவே இருந்த காய்ந்த மரக்கிளை ஒன்றின் மீது அமர்ந்திருந்த குரங்கு, வெளியேற வழி தெரியாமல் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. சாக்கடை நீரின் துர்நாற்றம் மற்றும் அடர்ந்த செடிகள் சூழ்ந்திருந்ததால் குரங்கின் நிலைமை மிகவும் கவலை அளிப்பதாக இருந்தது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் மிகுந்த வேதனை அடைந்து, உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். குரங்கை விரைந்து மீட்குமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர், உடனடியாக மீட்பு நடவடிக்கைகளில் இறங்கினர். குரங்கு பத்திரமாக நீந்தி கரை சேரும் வகையில், நீரில் மிதக்கும் உபகரணங்களைக் கொண்டு தற்காலிக பாதை ஒன்றை அமைத்தனர். வனத்துறையினர் தொடர்ந்து குரங்கை கண்காணித்து வந்த நிலையில், நேற்று குரங்கு மிதக்கும் பாதை வழியாக பத்திரமாக வெளியேறியது. குரங்கு நலமாக நீந்திச் செல்வதை அப்பகுதி மக்கள் உறுதி செய்ததாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Next Story