கோவை: பாலியல் அத்துமீறல் வழக்கு - தலைமறைவு மத போதகர் கைது !

X
கோவையில் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போக்சோ வழக்கில் தலைமறைவாக இருந்த மத போதகர் ஜான் ஜெபராஜ் (35) இன்று தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார். தென்காசி மாவட்டம் சாம்பார் வடகரையைச் சேர்ந்த இவர், கோவை ஜி. என். மில்ஸ் பகுதியில் வசித்து வந்தவர். கிறிஸ்தவ பாடல்கள் பாடி பிரசங்கம் செய்து வந்த இவர் மீது, தனது வீட்டில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற 2 சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து காந்திபுரம் மத்திய மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், ஜான் ஜெபராஜ் தலைமறைவானார். அவரை பிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட தனிப்படையினர் தீவிரமாக தேடி வந்தனர். அவர் வெளிநாடு தப்பிச் செல்வதை தடுக்க விமான நிலையங்கள், துறைமுகங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்நிலையில், மூணாறு பகுதியில் பதுங்கியிருந்த ஜான் ஜெபராஜை தனிப்படை போலீசார் இன்று கைது செய்தனர். தற்போது அவர் கோவை காந்திபுரம் மகளிர் காவல் நிலையத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறார். இன்று விடுமுறை தினம் என்பதால், ஆர்.எஸ்.புரம் நீதிபதி இல்லத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட உள்ளார்.
Next Story

