திருச்செந்தூரில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்!

திருச்செந்தூரில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்!
X
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று விடுமுறை தினத்தை முன்னிட்டு குவிந்த பக்தர்கள். நீண்ட வரிசையில் குடும்பத்துடன் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
தமிழ் கடவுளான முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதாலும், தமிழ் வருடத்தின் கடைசி தினம் என்பதாலும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதி காணப்படுகிறது. நேற்று இரவு பௌர்ணமி பூஜைக்காக கோயிலுக்கு வருகை தந்த பக்தர்கள் கோவில் முன்பு உள்ள கடற்கரையில் சிறப்பு பூஜையில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் அதிகாலை 4 மணிக்கு எழுந்து கடலில் புனித நீராடி நாழிக்கிணற்றில் குளித்துவிட்டு குடும்பத்துடன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதன் காரணமாக பொது தரிசனம், 100 ரூபாய் கட்டண தரிசனம், மூத்த குடிமக்களுக்காக தனி வரிசை பகுதியில் பக்தர்களின் கூட்டம் அலைமோதி காணப்படுகிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் கோவில் வளாகம் மற்றும் அதை சுற்றியுள்ள கடற்கரைப் பகுதி பேருந்து நிலையம், முடி காணிக்கை செலுத்தும் இடம் என அனைத்து பகுதிகளிலும் பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது. பக்தர்களின் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பில் அடிப்படை வசதிகளான மோர், குடிநீர், கழிப்பறை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி 100 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Next Story