திருவள்ளூரில் கிருஸ்தவர்களின் குருத்தோலை ஞாயிறு பவனி
ஈஸ்டர் பண்டிகையின் முக்கிய நிகழ்வான குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு திருவள்ளூரில் கிருஸ்தவர்களின் குருத்தோலை பவனி நடைபெற்றது. குருத்தோலைகளை கையில் ஏந்தியபடி நகரின் முக்கியப் பகுதிகளின் வழியாக ஓசன்னா கீதங்களை பாடியபடி கிறிஸ்தவ மக்கள் பவனியாக சென்று கொண்டாடி மகிழ்ந்தனர். திருவள்ளூர் மாவட்டத்தில் கிறிஸ்தவ தேவாலயங்களில் இன்று குருத்தோலை ஞாயிறை இன்று வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. கிறிஸ்தவ மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஈஸ்டர் பண்டிகையில் 7 வாரங்கள் கிறிஸ்தவ மக்கள் தவக்காலத்தை கடைபிடிக்கின்றனர். ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய வாரம் குருத்தோலை ஞாயிறை கொண்டாடுகின்றனர். இந்த நாளில் கிறிஸ்தவ மக்கள் குருத்தோலைகளை கையில் ஏந்தி பவனியாக சென்று தேவாலயங்களில் வழிபடுவது வழக்கம். அதாவது இயேசு கிறிஸ்து ஜெருசலேம் நகருக்குள் நுழையும்போது அவருக்கு மக்கள் கொடுத்த ஆரவார வரவேற்பு நிகழ்ச்சிதான் இந்த குருத்தோலை ஞாயிறு நிகழ்ச்சி. பாஸ்கா விழாவுக்காக இயேசு கிறிஸ்து ஜெருசலேம் நகருக்குள் வரும்போது அவருக்கு குருத்தோலைகளை விரித்து யூத மக்கள் வரவேற்பு அளித்தனர். கைகளில் ஒலிவ மரத்தின் இலைகளை வைத்து வாழ்த்து தெரிவித்தனர். இதை நினைவு கூறும் வகையில் தவக்காலத்தின் 6-வது ஞாயிற்றுகிழமையை உலகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஞாயிறாக கடை பிடிக்கிறார்கள். இந்த நிலையில் திருவள்ளூர் சி.எஸ்.ஐ கௌடி தேவாலயத்தில் இன்று குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்பட்டது. குருத்தோலைகளை கையில் ஏந்தியபடி நகரின் முக்கியப் பகுதிகளின் வழியாக ஓசன்னா கீதங்களை பாடியபடி கிறிஸ்தவ மக்கள் பவனியாக வந்தனர். பின்னர் தேவாலயங்களில் சிறப்பு திருப்பலிகளும் நடைபெற்றன.
Next Story






