கோவை: கஞ்சா விற்பனை செய்த இரு பெண்கள் உட்பட மூவர் கைது !

X
சூலூர் பாப்பம்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வந்த இரு பெண்கள் உட்பட மூன்று பேரை சூலூர் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 5.5 கிலோ காய்ந்த கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. சூலூர் பாப்பம்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து, காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த இரு பெண்களை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் கோவில்பாளையத்தைச் சேர்ந்த சந்திரா மற்றும் ஜோதி பகுதியைச் சேர்ந்த முபீலா என்பது தெரியவந்தது. மேலும், சரவணம்பட்டியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரின் உதவியுடன் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் கண்டறியப்பட்டது. இவர்கள் குறிப்பாக வடமாநிலத்தைச் சேர்ந்த நபர்களை குறிவைத்து கஞ்சாவை விற்பனை செய்து வந்துள்ளனர். இதனையடுத்து, காவல்துறையினர் ரத்தினபுரிக்கு விரைந்து சென்று சுரேஷை கைது செய்தனர். கைதான மூவரிடமிருந்தும் மொத்தம் 5.5 கிலோ காய்ந்த கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மூவரும் நேற்று நீதிபதியின் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story

