கம்யூனிஸ்ட் கட்சியும் ஒரு நாள் தமிழகத்தையும், இந்தியாவையும் ஆளும்

கம்யூனிஸ்ட் கட்சியும் ஒரு நாள் தமிழகத்தையும், இந்தியாவையும் ஆளும்
X
நாகையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பேட்டி
நாகையில், அகில இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் 30-வது தேசிய மாநாடு நாளை (15-ம் தேதி) தொடங்கி வருகிற 17-ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெற உள்ளது. மாநாடு பணிகள் குறித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் முத்தரசன் நேற்று பார்வையிட்டார். அப்போது, அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் இருந்தே, பாஜகவுடன் எக்காலத்திலும் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை, கூட்டணி வைக்கப் போவதும் இல்லை என எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறி வந்தனர். ஆனால், திடீரென பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதுதான், விடியல் கூட்டணி என்றும், இந்த கூட்டணியால் தான் மக்களுக்கு எதையும் செய்ய முடியும். அதனால் என்ன விளைவுகள் வந்தாலும் அதை எதிர்கொள்வோம் என எடப்பாடி கூறுகிறார். இந்த கூட்டணியை அதிமுக தொண்டர்களுக்கு பிடிக்கவில்லை. கட்சியினரும் ஏற்றுக்கொள்ள வில்லை. எடப்பாடி நிர்பந்தம் காரணமாகவே, பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளார். அமலாக்கத்துறை சோதனைக்கு பயந்த காரணத்தால், எடப்பாடி, பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளார். பாஜகவுடன் கூட்டணி வைத்த சரத்பவார் கட்சி, சிவசேனா ஆகிய கட்சிகளின் நிலை என்ன ஆனாது. பாஜக தன்னுடன் கூட்டணி வைத்துள்ள கட்சியை நயவஞ்சமாக அழித்து விடும். எடப்பாடி, டில்லிக்கு செல்வதற்கு முன் கட்சி அலுவலகத்தை பார்க்க செல்கிறேன் என்றார். அதன் பின்னர், தமிழக மக்கள் நலன் குறித்து உள்துறை அமைச்சருடன் பேசினேன் என கூறினார். இறுதியாக, தமிழகம் வந்த அமித்ஷா கூட்டணியை வெளிப்படுத்தினார். தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்யும் மத்திய அரசை தமிழக மக்களே எதிர்க்கின்றனர். எடப்பாடி, பாஜகவுடன் கூட்டணி வைத்து, தமிழகத்தை காட்டிக் கொடுத்த எட்டப்பன் ஆகி விட்டார். கரை படிந்த கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு, ஊழல் பற்றி பேச தகுதியில்லை. மறைந்த முதல்வர் ஜெயலலிதா மீது ஊழல் குற்றச்சாட்டு நீதிமன்றத்தால் நிருபிக்கப்பட்டு தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஊழல் குறித்து அண்ணாமலை பேசினார். இன்று கூட்டணி வைத்துள்ள காரணத்தால், அதிமுகவினர் ஊழல் செய்யவில்லை என பேசுவார்களா? அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைக்கும் போது எடப்பாடியும் இருந்தார். அண்ணாமலையும் இருந்தார். தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டதால், அமைச்சர் பொன்முடி விவகாரத்தில் மன்னிப்பது தான் தமிழனின் பண்பு. ஒரு கட்சி மீது குற்றம்சாட்டும் அரசியல்வாதி, அவர் முதலில் நேர்மையாக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் அதிமுக போன்ற கரை படிந்த கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்டு, ஊழல் பற்றி பேச உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தகுதியில்லை. அடுத்தவங்களுக்கு சேவை செய்ய யாரும் கட்சி நடத்தவில்லை. ஆட்சி, அதிகாரத்தை பிடிக்கவே அனைவரும் அரசியல் கட்சி நடத்துகின்றனர். கம்யூனிஸ்ட் கட்சியும் ஒரு நாள் தமிழகத்தையும், இந்தியாவையும் ஆளும். அப்போது கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் முதல்வராகவும், பிரதமராகவும் ஆவார்கள். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது, நாகை எம்.பி செல்வராஜ், மாநில குழு உறுப்பினர் வழக்கறிஞர் பாண்டியன் மற்றும் பலர் உடன் இருந்தனர். முன்னதாக, சட்ட மாமேதை அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது திருஉருவப் படத்திற்கு மாலை அணிவித்து மாநில செயலாளர் முத்தரசன் மரியாதை செலுத்தினார்.
Next Story