தமிழ் புத்தாண்டு முன்னிட்டு கோயில்களில் சிறப்பு வழிபாடு

மகா காளியம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேகம் - தீபாராதனை
சித்திரை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர். தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நேற்று நடைபெற்றது. நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றிய பகுதிகளில் உள்ள, அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. திட்டச்சேரி தைக்கால் தெரு மகா காளியம்மன் கோயிலில், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், தயிர், சந்தனம், மாப்பொடி, திரவிய பொடி உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, மாவிளக்கு பூஜை செய்து சாமி தரிசனம் செய்தனர். அதேபோல், திருக்கண்ணபுரம் சௌரிராஜ பெருமாள் கோயில், திருச்செங்காட்டங்குடி உத்தராபதீஸ்வரர் கோயில், திருமருகல் ரத்தினகிரீஸ்வரர் கோயில், வரதராஜ பெருமாள் கோயில், சுப்ரமணியசாமி கோயில், திருமருகல் செல்லியம்மன் கோயில், மாரியம்மன் கோயில், வாழ்மங்கலம் மழை மாரியம்மன் கோயில், திரவுபதி அம்மன் கோயில், வெள்ளத்திடல் மகா காளியம்மன் கோயில், மகா மாரியம்மன் கோயில், சீயாத்தமங்கை கால பைரவர் கோயில் உள்ளிட்ட அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story