தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வீடுகளில் முக்கனி வைத்து வழிபாடு

X
தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு, ஈரோடு மாவட்டத்தில் கோட்டை கபாலீஸ்வரர் கோவில், ரங்கநாதர் கோவில், மகிமாலீஸ்வரர், பெரியமாரியம்மன், சின்னமாரியம்மன், நடுமாரியம்மன், கொங்காலம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனால், பக்தர்களின் கூட்டம் அதிக அளவில் இருந்தது. கோவிலுக்கு வந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததோடு தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் தமிழ்புத்தாண்டு வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர். திண்டல் வேலாயுதசுவாமி கோயிலில் அதிகாலையில் அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடத்தப்பட்டது. இதேபோன்று, பவானி சங்கமேஸ்வரர் கோவில், கோபி பச்சமலை முருகன், பண்ணாரியம்மன், கொடுமுடி நட்டாற்றீஸ்வரர், அந்தியூர் பத்ரகாளியம்மன், ஈரோடு பார்க் ஆஞ்சநேயர் கோயில், ரயில்வே சாய்பாபா கோயில் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள கோயில்களில் சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். சென்னிமலை முருகன் கோயிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு முருகன் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பெருந்துறை ஸ்ரீவேதநாயகி உடனமர் சோழீஸ்வரர் திருக்கோயில், ஸ்ரீதேவி பூதேவி சமேத வெங்கட்டரமண சுவாமி, கோட்டை வீர ஆஞ்சனேயர் கோயில், கோட்டை மாரியம்மன் கோயில் உள்பட அனைத்து கோயில்களிலும் உள்ள மூலவர்களுக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.தமிழ்ப் புத்தாண்டையொட்டி சித்திரை கனி காணும் பூஜை பெரும்பாலான வீடுகளில் நடைபெற்றது. பூஜை அறையில் சுவாமி படங்கள், வீட்டில் மறைந்த குடும்ப பெரியவர்கள், முன்னோடிகளின் புகைப்படங்களை வைத்தும், மா, பலா, வாழை என முக்கனிகள், ஆப்பிள், திராட்சை, கொய்யா, ஆரஞ்சு, சாத்துக்குடி, மாதுளை இன்னும் பிற பழங்கள், வெற்றிலை, பாக்கு, சந்தனம், விபூதி, குங்குமம் ஆகியவற்றுடன் பணம், நகைகள் என்று பல்வேறு பொருள்களை தாம்பாளத்தில் வைத்தும், குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் கண்ணாடியின் பிம்பத்தில் பார்த்து, சுவாமியை வழிபட்டனர்.
Next Story

