விவசாயத் தொழிலாளர் இறந்தால் நிவாரணம் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது

அகில இந்திய விவசாயிகள் சங்க மாநாட்டில் தமிழக வேளாண் துறை அமைச்சர் பேச்சு
அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் 30-வது தேசிய மாநாடு, நாகையில் நேற்று தொடங்கியது. மாநாடு வருகிற 17-ம் தேதி இரவு பொதுக் கூட்டத்துடன் நிறைவு பெறுகிறது. தியாகிகள் நினைவுச்சுடர் சங்கமத்துடன் முதல் நாள் நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. நாகை எம்பி செல்வராஜ் வரவேற்றார். முன்னாள் எம்எல் ஏ தாராசிங் சித்து மாநாடு கொடியை ஏற்றினார். முன்னாள் எம்எல்ஏ பழனிச்சாமி, தியாகிகள் நினைவு சின்னத்தை திறந்து வைத்தார். மாநாட்டிற்கு, அகில இந்திய விவசாயிகள் சங்க தலைவர் ராஜன்கிஸ்லி சாகர் தலைமை வகித்தார். கேரள மாநில வேளாண் துறை அமைச்சர் பிரசாத் மாநாட்டை தொடங்கி வைத்தார். தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசியதாவது தமிழக அரசின் பட்ஜெட் மூலம் தமிழக மக்கள் தைரியமாகவும், கம்பீரமாகவும் நடக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. அதிலும், தமிழ்நாட்டில் வேளாண்மைக்கு என தனி பட்ஜெட்டை முதல்வர் நடைமுறைப்படுத்தியுள்ளார். இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியுடன் வாழுகின்றனர். கடந்த ஆட்சி காலத்தில், விவசாயிகள் தங்களது தேவைகளுக்காக போராடி வந்தனர். ஏன் இந்திய அளவில் எடுத்து கொண்டால், மத்திய அரசின் விவசாயிகள் விரோத போக்கை கண்டித்து போராடியுள்ளனர். இன்னும் போராடி கொண்டு இருக்கின்றனர். இங்கு நிகழ்ச்சி தொடங்கும் போது, போராட்டத்தின் போது உயிர் நீத்த தோழர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினர். இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் விவசாயிகள் இன்னும் போராடி கொண்டு தான் இருக்கின்றனர். அத்தகைய சூழ்நிலை தமிழகத்தில் இல்லை. முதலமைச்சர் விவசாயிகள் நலன்சார்ந்த திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருவது தான் இதற்கு காரணம். மறைந்த முதலமைச்சர் கருணாநிதி ஆட்சி காலத்தில் ஒரே கையெழுத்தில் உழுபவர்களுக்கு எல்லாம் நிலத்தை சொந்தமாக்கி கொடுத்தார். இதற்கு சாட்சி, இங்குள்ள கம்யூனிஸ்ட் தோழர்களுக்கு தெரியும். இதை தொடர்ந்து நமது முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன், வேளாண்மை துறைக்கு தனி பட்ஜெட் அறிவித்தார். இதனால் விவசாயிகள் வாழ்வில் இன்று வசந்தகாலம் வீசுகிறது. பயிர் காப்பீடு திட்டம், நெல் கொள்முதல் ஊக்க தொகை கொடுத்துள்ளார். வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டம் என பல திட்டங்களை அறிவித்து, விவசாயிகளை அடுத்த இடத்திற்கு கொண்டு சென்றுள்ளார். கடைமடைக்கு தண்ணீர் வர வேண்டும் என்பதற்காக தூர்வாரும் பணி. ரூ.160 கோடி மதிப்பில் குறுவை தொகுப்பு வழங்கியுள்ளார். விவசாயிகள் தலைநிமிர்ந்து வாழும் நிலையை முதலமைச்சர் உருவாக்கி கொடுத்துள்ளார். விவசாய தொழிலாளர்கள் இறந்தால் நிவாரணம் உயர்த்தி வழங்கியுள்ளார். தமிழக முதலமைச்சரின் திட்டங்கள், பிற மாநில முதல்வர்களுக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. கடந்த ஆட்சி காலத்தில், விவசாயிகள் தற்கொலை நடந்துள்ளது. ஆனால், இது போன்ற நிகழ்வுகள் எதுவும் நடைபெறாமல் முதலமைச்சர் விவசாயிகளை கண்ணும் கருத்துமாக பார்த்து கொள்கிறார். வேளாண் பட்ஜெட் வெளியிடுவதற்கு முன்பு விவசாயிகளை சந்தித்து அவர்களின் கோரிக்கையை ஏற்று, அதற்கு ஏற்ப பட்ஜெட் வெளியிடப்படுகிறது. அதனால் தான், பிற மாநிலங்களில் விவசாயிகள் போராடும் போது தமிழகத்தில் மட்டும் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார். முடிவில், வரவேற்பு குழு செயலாளர் மாசிலாமணி நன்றி கூறினார். நாளை (16-ம் தேதி) 2-ம் நாள் நிகழ்ச்சியாக, பிரதிநிதிகள் மாநாடு நடைபெறுகிறது. வருகிற 17-ம் தேதி நாகை அவுரித்திடலில் இருந்து பேரணி புறப்பட்டு, காடம்பாடியில் உள்ள திடலில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. பொதுக்கூட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொது செயலாளர் து.ராஜா பேசுகிறார்.
Next Story