பட்டுக்கோட்டையில், விடிய விடிய நடைபெற்ற தமுஎகச கலை இலக்கிய இரவு

கலை இலக்கிய இரவு
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில், மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 96 ஆவது பிறந்த நாள் விழா, 44 ஆவது கலை இலக்கிய இரவு திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, திங்கள்கிழமை காலை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மணிமண்டபத்தில் மக்கள் கவிஞர் சிலைக்கு என்.சி.இரத்தினவேலு தலைமையில், தமுஎகச கிளை துணைத் தலைவர் க.கிருஷ்ணமூர்த்தி மாலை அணிவித்தார்.  மாலை 5 மணிக்கு பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து அலங்கார வாகனத்தில், ஐம்பெரும் ஆளுமைகள் பாரதியார், பாரதிதாசன், மக்கள் கவிஞர் கல்யாணசுந்தரம், கவிஞர் தமிழ் ஒளி, நாட்டியப் பேரொளி பாலசரஸ்வதி திருவுருவப்படங்களுடன் சிலம்பாட்டம், பொய்க்கால் ஆட்டம், சுருள், வாள் வீச்சு, தப்பாட்டத்துடன்  தமுஎகச மாவட்ட தலைவர் கவிஞர் சா.ஜீவபாரதி துவக்கி வைக்க, தமுஎகச மாவட்டக்குழு உறுப்பினர் கோ.ஆறுமுகம் தலைமையில் கலை இலக்கியப் பேரணி,  நடைபெற்றது. தொடர்ந்து சமூக நீதிப் போராளிகள் தந்தை பெரியார் சிலைக்கு வீ.சாமிநாதன், மக்கள் கவிஞர் சிலைக்கு தமிழவன், பட்டுக்கோட்டை அழகிரி சிலைக்கு கண.கேசவன், டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு கவிஞர் பா.மனோஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.  மாலை 6 மணிக்கு கவிஞர் நந்தலாலா, கவிஞர் நாறும் பூ நாதன், கரிசல் குயில் கிருஷ்ணசாமி நினைவரங்கில், கலை இலக்கிய இரவு, கிளைத் தலைவர் முருக.சரவணன் தலைமையில் துவங்கியது. கிளைச் செயலாளர் மோரீஸ் அண்ணாதுரை வரவேற்றார். தமுஎகச மாவட்டச் செயலாளர் இரா.விஜயகுமார் துவக்கி வைத்து பேசினார்.  தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி உதவிப் பேராசிரியர் மருத்துவர் க.பாரதிராஜா வாழ்த்திப் பேசினார். ஒரிசா மாநில முன்னாள் தலைமைச் செயலாளர், ஓய்வு இ.ஆ.ப அலுவலர், வரலாற்று ஆய்வாளர் ஆர்.பாலகிருஷ்ணன், "சிந்துவெளி விட்ட இடமும், சங்க இலக்கியம் தொட்ட இடமும்" என்ற தலைப்பிலும், கவிஞர் கே. ஜீவபாரதி, "பட்டுக்கோட்டையாரின் பாட்டுப் பயணம்" என்ற தலைப்பிலும், தமுஎகச துணைப் பொது செயலாளர் கவிஞர் களப்பிரன், "இசை மொழியும்- சிம்பொனியும்" என்ற தலைப்பிலும் உரைவீச்சு நிகழ்த்தினர்.  நாகர்கோவில் முரசு கலைக்குழுவின் மக்கள் ஆட்டக் கலைகளும், திரையிசை பின்னணி பாடகர் புதுக்கோட்டை சுகந்தி மற்றும் கு.மல்லிகா, சி.மணிமாறன், தஞ்சை தமிழ்வாணன்,  ஆர்.ராஜேந்திரன், எஸ்.மோனிகா ஆகியோர் மண் மணக்கும் மக்கள் பாடல்களை பாடினர்.  புதுகை பூபாளம் கலைக்குழுவின் அரசியல் நையாண்டி நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சி.ஆசைத்தம்பி தலைமையில், சமூக சேவை செய்யும் ஆலயம் அறக்கட்டளை நிர்வாகிகள், திருநங்கைகள் சில்பா, கௌசல்யா ஆகியோரை கவிஞர் பாக்யா பாலா பாராட்டிப் பேசினார். கதை சொல்லல், வரவேற்பு நடனம், நூலரங்கம், கவியரங்கம் நடைபெற்றது. நிறைவாக தமுஎகச கிளைப் பொருளாளர் எல்ஐசி கா.பக்கிரிசாமி நன்றி கூறினார்.
Next Story