தேசிய வருவாய்வழி திறனறிவுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு

மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு
கடந்த பிப்ரவரி மாதம் இந்தியா முழுவதும் நடைபெற்ற தேசிய வருவாய்வழி திறன் படிப்பு (NMMS) உதவித்தொகை பெறுவதற்கான தேர்வு நடைபெற்றது. என்.எம்.எம்.எஸ் தேர்வை 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் எழுதலாம். ஒவ்வொரு ஆண்டும் இத்தேர்வு தமிழக தேர்வுத் துறை மூலம் நடத்தப்படுகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இத்தேர்வு எழுத தகுதியானவர்கள். மேலும், மாணவர்களின் பெற்றோர்களின் ஆண்டு வருமானம் ரூ.3.5 லட்சத்திற்குள் இருக்க வேண்டும் தேர்வாகும் மாணவர்கள் ஆண்டுக்கு ரூபாய் 12 ஆயிரம் என, நான்கு ஆண்டுகளுக்கு ரூபாய் 48 ஆயிரம் உதவித் தொகையாக பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை மாதம் ரூ.1,000 கல்வி உதவித்தொகையாக வங்கி கணக்கில் செலுத்தப்படும். மன திறன் சோதனை (MAT) மற்றும் கல்வித் திறன் சோதனை (SAT) என இரண்டு பாடத்திட்டங்களில் இத்தேர்வு அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் இருந்து 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதினர். இதில் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட 6,695 இடங்களுக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில், தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள கொன்றைக்காடு அரசு உயர்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு பயின்று வரும் வி.கமலேஷ்வரன், ப.மோகிதாஶ்ரீ ஆகிய இரண்டு மாணவர்களும் தேர்வாகி உள்ளனர். தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை தலைமை ஆசிரியர் (பொறுப்பு) சு.குமரேசன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் எஸ்.கே.இராமமூர்த்தி, பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் கவிதா விநாயகமூர்த்தி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினார்கள். பொன்னாங்கண்ணிக்காடு இதேபோல, பொன்னாங்கண்ணிக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் படிக்கும் இறையன்பு மற்றும் நிவேந்தன் ஆகிய மாணவர்கள் தேசிய வருவாய் வழி திறனறித் தேர்வில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் (பொ) முருகையன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கணேசன், பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் பொம்மியம்மாள் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினார்கள். நாட்டாணிக்கோட்டை வடக்கு நாட்டாணிக்கோட்டை வடக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவிகள் இரா.நிஹ்மத் முன்ஷிதா, ஜெ.அனிஷா பேகம் ஆகியோரும், தேசிய வருவாய் வழி திறனறித் தேர்வில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களை பள்ளித் தலைமை ஆசிரியர் நிர்மலா, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் வீராசாமி, பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் திவ்யா, பேரூராட்சி கவுன்சிலர் வீ.ப.நீலகண்டன், மணிமாலா நீலகண்டன் ஆகியோர் பாராட்டினர்.
Next Story