சித்திரை திருநாளையொட்டி தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடங்கிய "நல்லேர் பூட்டும்" விழா

சித்திரை திருநாளையொட்டி தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடங்கிய நல்லேர் பூட்டும் விழா
X
நல்லேர் பூட்டும் விழா
சித்திரை திருநாளை முன்னிட்டு, தஞ்சாவூர்  மாவட்டத்தில், பல்வேறு இடங்களில்  நல்லேர் பூட்டும் விழாக்கள் திங்கள்கிழமை தொடங்கியது. விவசாயப் பணிகளை தொடங்க ஒவ்வொரு விவசாயியும் நல்ல நாள், நேரம் பார்த்து சாகுபடி பணிகளை தொடங்குவது வழக்கம். அதே போல் தமிழர்களின் தமிழ் மாத ஆண்டு துவக்கத்தின் போது, நல்ல நாள் பார்த்து ஏர் பூட்டிய பின்னர் தான், வயலில் அந்த ஆண்டுக்கான சாகுபடியை துவங்குவது தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளின்  ஒரு வழக்கமாகும். இந்த  நிகழ்வை "நல்லேர் பூட்டும்" விழாவாக இன்றளவும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனை சில பகுதிகளில் பொன்னேர் பூட்டும் விழா என்றும் அழைப்படுகிறது. அதன்படி, சித்திரை திருநாள் தொடக்க தினமான திங்கள்கிழமை தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளியக்ரஹாரம், ராவுசாப்பட்டி, தங்கப்ப உடையான்பட்டி, வேங்கராயன்குடிக்காடு, கணபதி அக்ரஹாரம், திருவையாறு அருகே விளாங்குடி, பேராவூரணி அருகே மாவடுகுறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் நல்லேர் பூட்டி, நிகழாண்டு சாகுபடியில் அதிக மகசூலும், எவ்வித இடையூறும் இருக்ககூடாது என பிரார்த்தித்தனர். முன்னதாக மாடுகளை குளிப்பாட்டி, நல்லேர் பூட்ட வயலில் இயற்கை உரம், நவதானிய விதைகளை தூவி, வெல்லம் கலந்த பச்சரிசியை கொண்டு சூரிய பகவானுக்கு பூ, பழம், தேங்காய் ஆகியவற்றை படையலிட்டு உழவு மாடுகளை கொண்டு பாரம்பரிய முறைப்படி ஏர் பூட்டினர். தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே மாவடுகுறிச்சியில் நடைபெற்ற நல்லேர் பூட்டும் நிகழ்ச்சியில், சங்கர மடத்தின் சார்பில் ஜி.ஆர்.ஸ்ரீதர் கலந்து கொண்டு, விவசாயிகளுக்கு பழம், தேங்காய், வெற்றிலை, சர்க்கரை கலந்த பச்சரிசி, காணிக்கை பணம் ஆகியவற்றை வழங்கினார்.  தொடர்ந்து பாரம்பரிய முறைப்படி கையளவு விதைநெல் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. மாவடுக்குறிச்சியிலே ஒரே இடத்தில் 10க்கும் மேற்பட்ட ஜோடி மாடுகள் ஏரில் பூட்டப்பட்டது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர். அதே போல் தஞ்சாவூர் அருகே ராவுசாப்பட்டியில்  உழவுமாடு ஏர் குறைந்து, விவசாயப் பணிகளுக்கு  டிராக்டர் வந்துவிட்டதால், விவசாயிகள் ஒரே இடத்தில் பத்துக்கும் மேற்பட்ட டிராக்டர்களை கொண்டு வந்து உழவு பணிகளை துவக்கி, டிராக்டர்களுக்கு பூஜை நடத்தி, இந்தாண்டுக்கான உழவுப் பணிகளை தொடங்கினர். இந்த நல்லேர் பூட்டும் நிகழ்வுகள் தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று தொடங்கி சித்திரை மாதத்தில் சுப தினங்களில் ஒவ்வொரு கிராமங்களில் நடைபெறவுள்ளது.
Next Story