தஞ்சாவூர் தீயணைப்பு நிலையத்தில் தீத்தொண்டு நாள் அனுசரிப்பு

X

தீத்தொண்டு நாள் அனுசரிப்பு
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தீயணைப்பு நிலையங்களிலும் திங்கள்கிழமை தீத்தொண்டு நாள் அனுசரிக்கப்பட்டது. மும்பை துறைமுகத்தில் கடந்த 1944-ஆம் ஆண்டு ஏப்.14-ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில், மும்பை தீயணைப்புத் துறையை சேர்ந்த 66 தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்தனர். இவர்கள் நினைவாக, ஏப்ரல் 14-ஆம் தேதி இந்தியா முழுவதும் நினைவேந்தல் செலுத்தும் நிகழ்ச்சி தீத் தொண்டு நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, திங்கள்கிழமை தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் உள்ள மாவட்ட தீயணைப்பு நிலையத்தில் தீத்தொண்டு நாள் அனுசரிக்கப்பட்டது. மாவட்ட தீயணைப்பு அலுவலர் ச.குமார் தலைமையில், மாவட்ட உதவி அலுவலர் பா.முருகேசன், நிலைய அலுவலர் ந.கணேசன் ஆகியோரது முன்னிலையில் உயிர் நீத்த தீயணைப்பு வீரர்களுக்கும், பணியின் போது உயிர்நீத்த வீரர்களுக்கும் தற்போதைய தீயணைப்பு வீரர்கள், மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, தீ தொண்டு நாள் கடைபிடித்து, " தீ விபத்து இல்லாத இந்தியாவை உருவா்கிட ஒன்றிணைவோம்" என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து வருகிற ஏப்.20-ம் தேதி வரை தீத்தொண்டு வாரம் அனுசரிக்கப்பட உள்ளது. இதையடுத்து, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், பேருந்து, ரயில் நிலையங்கள், அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தீ தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டு துண்டு பிரசுரம் விநியோகிக்கப்படும் என மாவட்ட தீயணைப்பு அலுவலர் ச.குமார் தெரிவித்தார். பேராவூரணி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தில் நிலைய அலுவலர் வீ.சீனிவாசன் தலைமையில் பணியின் போது உயிர் நீத்த வீரர்களின் நினைவாக மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இதே போல் ஒரத்தநாடு, திருக்காட்டுப்பள்ளி, பட்டுக்கோட்டை, திருவையாறு, கும்பகோணம், திருவிடைமருதூர், பாபநாசம் ஆகிய இடங்களில் உள்ள தீயணைப்பு அலுவலங்களிலும் தீத்தொண்டு நாள் கடைபிடிக்கப்பட்டது.
Next Story