பாஜக அரசை கண்டித்து மாவட்ட காங்கிரஸ் கட்சியினர்

வருமான வரித்துறை அலுவலகத்தை பூட்டி போராட்டம்
நேஷனல் ஹெரால்டு வழக்கில், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி மற்றும் எம்பி ராகுல் காந்தி ஆகியோர் மீது அமலாக்கத்துறை குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. அரசியல் பழிவாங்கும் நோக்கில் பொய்யாக வழக்கு பதிந்து, பாஜக அரசு  குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக குற்றம் சாட்டி, காங்கிரஸார், நாகை நடுவர் கீழ வீதியில் உள்ள வருமான வரி அலுவலகம் முன் நேற்று மாலை மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ஆர்.என்.அமிர்தராஜா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. திடீரென வருமான வரித்துறை அலுவலகத்திற்கு காங்கிரஸ் கட்சியினர் பூட்டு போட முயன்று முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசாரின் பாதுகாப்பை மீறி, மாவட்டத் தலைவர் ஆர்.என்.அமிர்தராஜா பூட்டுக் கொண்டு, வருமான வரித்துறை அலுவலகத்தை பூட்டு முயன்ற போது, போலீசாருக்கும் காங்கிரசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது‌. இதில், மாவட்ட தலைவரின் சட்டை கிழிந்த நிலையில் போலீசாரை கண்டித்து, மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பியபடி திடீரென சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், காங்கிரஸ் கட்சியினரை குண்டு கட்டாக தூக்கி, காவல் வாகனத்தில் ஏற்றிய போலீசாரால் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில், மாநில செயலாளர் நௌசாத், மாநில காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் நடேசன், மாவட்ட துணை தலைவர்கள் ஓ.ஜி.வரதராஜன், ராமலிங்கம், சமோவா தள தலைவர் நசீர்அலி, கீழ்வேளூர் வட்டாரத் தலைவர் லியோ, நாகூர் நகரத் தலைவர் சர்புதீன், நாகை நகர பொறுப்பாளர் ஏ.சந்தான மாரிமுத்து உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story