புதிய வரிவிதிப்பை திரும்ப பெறக்கோரி

புதிய வரிவிதிப்பை திரும்ப பெறக்கோரி
X
சேலத்தில் எம்.சாண்ட், ஜல்லி உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தம்
தமிழகத்தில் இதுவரை குவாரிகளில் இருந்து கல் உடைத்து எடுத்து வரும் போது கனமீட்டர் அடிப்படையில் அரசுக்கு வரி செலுத்தப்பட்டு வந்தது. ஆனால் இனிமேல் மெட்ரிக் டன் முறையில் வரி செலுத்த வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த புதிய வரிமுறையால் உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உற்பத்தி செலவினம் பலமடங்கு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ஜல்லி, எம்.சாண்ட் மற்றும் பி.சாண்ட் ஆகியவற்றிற்கு தற்போதுள்ள விலையில் இருந்து, ஒரு யூனிட்டிற்கு சுமார் ரூ.1,000 முதல் ரூ.1,500 வரை உயர்த்த வேண்டிய கட்டாயத்திற்கு உரிமையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். எனவே, பழைய நடைமுறைப்படி கனமீட்டரை அடிப்படையாக கொண்டு வரிவசூல் செய்ய வேண்டும். புதிதாக விதிக்கப்பட்டுள்ள சிறு கனிம நில வரியை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஜல்லி உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தத்தை தொடங்கி உள்ளனர். சேலம் மாவட்டத்தில் 70 கிரஷர் ஜல்லி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் கிரஷர்களில் ஆட்கள் வேலை செய்யாமல் வெறிச்சோடி காணப்படுகிறது. அங்கு வேலை செய்த தொழிலாளர்களுக்கு வேலையில்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். கிரஷர், ஜல்லி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக கட்டிட வேலைக்கு தேவையான எம்.சாண்ட், பி.சாண்ட், ஜல்லி மற்றும் தார்சாலை பணிக்கான பொருட்கள் கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.
Next Story