சென்னை, புறநகர் பகுதிகளில் வெப்பம் தணிந்தது: பலத்த காற்றுடன் கொட்டி தீர்த்த கனமழை
தமிழகத்தில் பிப்ரவரி மாதம் முதலே வெப்பம் வாட்டத் தொடங்கியது. அவ்வப்போது வெப்பநிலை உயர்ந்தும் காணப்பட்டது. கடந்த 12-ம் தேதி சென்னை நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம் உள்ளிட்ட 9 நகரங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவாகி இருந்தது. இந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. 9 மணிக்கு மேல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் லேசான தூறலுடன் மழை பெய்யத் தொடங்கியது. பின்னர் கனமழையாக மாறியது. குறிப்பாக, சேப்பாக்கம், மயிலாப்பூர், ராயப்பேட்டை, வேப்பேரி, புரசைவாக்கம், பெரம்பூர், சைதாப்பேட்டை, கிண்டி, ஆலந்தூர், கோயம்பேடு, வளசரவாக்கம், வடபழனி, அரும்பாக்கம், நுங்கம்பாக்கம் மற்றும் புறநகர் பகுதிகளான மேடவாக்கம், தாம்பரம், ஆவடி, பூந்தமல்லி, மீஞ்சூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கன மழை பெய்தது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்களும், பணிக்குச் செல்லும் பணியாளர்களும், தனியார் நிறுவன ஊழியர்களும் நேரத்தோடு கல்வி நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களுக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். கனமழை காரணமாக மெட்ரோ ரயில்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது. சென்னை, புறநகர் பகுதிகளில் பல்வேறு சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்கியது. இதனால் பூந்தமல்லி நெடுஞ்சாலை, பழைய மாமல்லபுரம் சாலை, அண்ணா சாலை, வேளச்சேரி நெடுஞ்சாலை, ஜிஎஸ்டி சாலை உள்ளிட்டவற்றில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
Next Story






