சீரக குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

X
மங்கலம் ஊராட்சி சுல்தான்பேட்டை ஏ.டி.காலனி பகுதியில் 1000-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வசிப்பவர்கள் பெரும்பாலும் கூலித்தொழிலாளர்களாக உள்ளனர். இவர்களுக்கு மங்கலம் ஊராட்சி நிர்வாகம் சார்பில் 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்படுவது வழக்கம். இந்த நிலையில் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக மங்கலம் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் குடிநீர் வழங்காததால் சுல்தான்பேட்டைஏ.டி.காலனி பகுதியில் இருந்து திருப்பூர் செல்லும் சாலையில் அமர்ந்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த மங்கலம் போலீசார், திருப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் வேலுச்சாமி மற்றும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வராஜ், மங்கலம் ஊராட்சி செயலாளர் நாகராஜ் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அப்போது அதிகாரிகள் பொது மக்களிடம் 'சீராக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்தனர். இதை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Next Story

