தஞ்சாவூர் அருகே இளம்பெண் தற்கொலை விவகாரம்: தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய இயக்குநர் விசாரணை

X
தஞ்சாவூரில், அண்ணன் கைது செய்யப்பட்டதால், காவல்நிலையம் முன்பு, விஷம் குடித்த தங்கை இறந்த விவகாரம் தொடர்பாக, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய இயக்குநர் வியாழக்கிழமை விசாரணை நடத்தினர். தஞ்சாவூர் மாவட்டம் நடுக்காவேரியை சேர்ந்த தினேஷ் (32). இவர் மீது பொய் வழக்குப் பதிவு செய்து, கைது செய்யப்பட்டதாகக் கூறி, தினேஷின் தங்கைகளான மேனகா (31), கீர்த்திகா (29), நடுக்காவேரி காவல்நிலையம் முன்பு, ஏப்.8 ஆம் தேதி, விஷம் குடித்தனர். தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், இருவரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், கீர்த்திகா ஏப்.9 ஆம் தேதி உயிரிழந்தார். மேனகா தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் தொடர்பாக, காவல் ஆய்வாளர் சர்மிளா ஏப்ரல் 11 ஆம் தேதி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். மேலும், இரண்டு உதவி ஆய்வாளர்கள், ஒரு பெண் தலைமைக் காவலர் ஆகியோர் 16 ஆம் தேதி பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். தற்கொலைக்கு தூண்டுதல், எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் மாற்றி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது. ஆனால், ஆய்வாளர் சர்மிளா உள்பட நான்கு காவல்துறையினரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். அரசு வேலை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, கீர்த்திகாவின் உடலை வாங்க மறுத்து, நடுக்காவேரியில், 8 ஆவது நாளாக, குடும்பத்தினர் உறவினர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக, உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு நடந்து வருகிறது. இந்நிலையில், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய இயக்குநர் ரவிவர்மன், நடுக்காவேரி காவல்நிலையத்தில் விசாரணை நடத்தினர். பிறகு, இறந்த கீர்த்திகாவின் வீட்டிற்கு சென்று, தந்தை அய்யாவு மற்றும் பெரியம்மா சுசிலா ஆகியோரிடம் விசாரணை நடத்தி, சம்மந்தப்பட்டவர்கள் மீது முறையாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார். பிறகு, தஞ்சாவூர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கீர்த்திகாவின் சகோதரி மேனகாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது மேனகா, "காவல்துறையினர் மோசமாக நடந்து கொண்டார்கள். நாங்கள் இல்லாதவர்கள், எங்களுக்கு நியாயமான தீர்வை வாங்கிக்கொடுங்கள்" என தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய இயக்குநரிடம் கூறி கண்ணீர் வடித்தார். விசாரணையின் போது, தஞ்சாவூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இரா.இராஜாராம், தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் செ.இலக்கியா உடனிருந்தனர்.
Next Story

