உடுமலை மாரியம்மன் கோவில் தேரோட்டம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. வருடா வருடம் தேர் திருவிழா இங்கு வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு தேர் திருவிழா கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி நோன்பு சாட்டுதலுடன் துவங்கி தொடர்ந்து 8ம் தேதி கம்பம் நடுதல் நிகழ்ச்சி அதன்பின் தினந்தோறும் பக்தர்கள் கம்பத்துக்கு தீர்த்தம் ஊற்றி வழிபடுதல் மேலும் பூவோடு எடுத்தல்,பறவை காவடி , அலகு குத்துதல் என நேர்த்திக்கடன் செலுத்துதல் என வெகு விமர்சையாக மாரியம்மன் தேர் திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டத்திற்கு முன்பாக, அம்மன் திருக்கல்யாணம் நேற்று மாலை நடைபெற்றது. இதனையடுத்து இன்று காலை அருள்மிகு மாரியம்மன் சூலத்தேவருடன் திருத்தேருக்கு எழுந்தருழுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை தொடர்ந்து மாலை 4 மணிக்கு திருத்தேரோட்டம் நடைபெற்றது. சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று திருத்தேர் வடம் பிடித்து இழுத்தனர். தேரினை தள்ளுவதற்காக கேரள மாநிலத்தில் இருந்து மணிகண்டன் என்ற ஆண் யானை வரவழைக்கப்பட்டுள்ளது. மாரியம்மன் திருத்தேர் திருவீதி உலா மாரியம்மன் கோயிலில் தொடங்கி தளி ரோடு, குட்டை திடல், தங்கம்மாள் ஓடை வழியாக திரும்பவும் கோவில் வந்தடையும். திருத்தேரை காண உடுமலை, மடத்துக்குளம், பொள்ளாச்சி சுற்று வட்டார கிராமங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பக்தர்கள் உடுமலை நகரில் குவிந்துள்ளனர். இந்தப்பகுதியில் நடைபெறும் மிகப்பெரிய தேர்திருவிழா என்பதால் மாவட்ட காவல் துறை சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 500 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர். மேலும் போக்குவரத்து வாகன நெரிசலை தவிர்க்க போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Next Story



