சேலம் அரசு ஆஸ்பத்திரியில் தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

X
சேலம் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மாவட்ட தீயணைப்பு அலுவலர் மகாலிங்கமூர்த்தி தலைமை தாங்கி பேசினார். அப்போது எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டு, அதன் மூலம் ஆடைகளில் தீப்பிடித்தால் உடனே தரையில் படுத்து உருண்டு தீயை அணைக்க முயற்சிக்க வேண்டும். தீப்பிடித்ததும் அங்கும், இங்கும் ஓடக்கூடாது. தீக்காயம் ஏற்பட்ட இடங்களில் குளிர்ந்த நீரை ஊற்ற வேண்டும். சமையல் செய்தவுடன், கியாஸ் சிலிண்டர் சரியாக அடைக்கப்பட்டு உள்ளதா? என்பதை சரி பார்க்க வேண்டும். மின்சாரம் மூலம் தீ விபத்து ஏற்படுவதை தடுக்க, வீடுகளில் தரமான மின் சாதனங்கள் பயன்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார். தொடர்ந்து அரசு ஆஸ்பத்திரி வளாகம் முன்பு தீத்தடுப்பு ஒத்திகை நடத்தி காண்பிக்கப்பட்டது. அதன்படி 5 ஆயிரம் லிட்டர் தண்ணீர் கொள்ளளவு கொண்ட நவீன வாகனம் மூலம் தீ தடுப்பு ஒத்திகை நடத்தி காண்பித்தனர். மேலும் உலர் மாவு, நுரை கலவை மற்றும் தண்ணீர் மூலம் தீயை எவ்வாறு அணைப்பது என்பது குறித்து விளக்கம் அளித்தனர். இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள், நர்சுகள், பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story

