தமிழ் புலிகள் கட்சியினர் ரயில் மறியல் ஈடுபட முயன்றதால் கைது

X
மத்திய அரசின் வக்பு வாரிய திருத்த சட்ட மசோதாவை கண்டித்து நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.இதன் தொடர்ச்சியாக ஈரோட்டில் தமிழ் புலிகள் கட்சியின் சார்பில் வக்பு வாரிய சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் போலீசார் எதற்கு அனுமதி மறுத்தனர். போலீசார் தடையில் மீறி திட்டமிட்டபடி மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.இதைத் தொடர்ந்து இன்று மதியம் தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன் தலைமையில் 200 -க்கும் மேற்பட நிர்வாகிகள் காளைமாட்டு சிலை அருகே திரண்டனர். தமிழ் புலிகள் கட்சியின் மத்திய மாவட்ட செயலாளர் சிந்தனைச் செல்வன் முன்னிலை வகித்தார்.காளை மாட்டு சிலையிலிருந்து ரயில் நிலையம் நோக்கி நிர்வாகிகள் ஊர்வலமாக சென்றனர். அப்போது ஈரோடு டவுன் டிஎஸ்பி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் ரயில்வே நுழைவாயில் முன்பு தடுப்புகளை அமைத்து உள்ளே யாரும் சென்று விடாத வகையில் அரண் போல் நின்றனர். அப்போது அங்கு வந்த தமிழ் புலிகள் கட்சியினர் போலீசாரின் தடுப்புகளை மீறி ஏறி குதித்து ரயில் நிலையம் நோக்கி ஓடினர்.இதனால் தமிழ் புலிகள் கட்சி போலீசார் கடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒரு சில நிர்வாகிகள் தடுப்புகளை தாண்டி ஏறி குதித்து ரயில் நிலையத்திற்குள் ஓடினர். அவர்களை விரட்டி சென்று டிக்கெட் கொடுக்கும் பகுதியில் போலீசார் தடுத்து நிறுத்தினர். இந்த இடத்தில் அங்கேயே அமர்ந்து தமிழ்புலிகள் கட்சியினர் வக்பு வாரிய சட்ட திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினர். இதனால் ரயில் நிலையத்தில் பரபரப்பு நிலவியது. .இதன் பின்னர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 200க்கும் மேற்பட்ட தமிழ் புலிகள் கட்சியினர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் வேன் மூலம் அருகே உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன் மத்திய அரசு வக்பு வாரிய திருத்த சட்ட மசோதாவை திரும்ப பெறும் வகையில் தொடர் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.இந்த சம்பவத்தின் காரணமாக ஈரோடு ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.தொடர்ந்து 50க்கும் மேற்பட்ட போலீசார் ரயில் நிலையம் சுற்றி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் ரயில் நிலையத்திற்குள் ரயில்வே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Next Story

