வீடுகளில் நடைபெறும் விழாக்களில் மரக்கன்றுகளை பரிசளியுங்கள் - நீதியரசர் என்.செந்தில்குமார்

X
தஞ்சாவூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், தஞ்சாவூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில், மரக்கன்றுகள் நடுவிழா மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நீதியரசர் என்.செந்தில்குமார் வெள்ளிக்கிழமை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். இவ்விழாவில், மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் முன்னிலை வகித்தார். மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட நீதிபதி கே.பூரண ஜெயஆனந்த் அனைவரையும் வரவேற்றார். இவ்விழாவில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நீதியரசர் என்.செந்தில்குமார் பேசியதாவது, "தஞ்சாவூர் மாவட்டம் இந்தியாவிற்கே உணவளிக்கக் கூடிய “தமிழகத்தின் நெற்களஞ்சியம்” என்ற பெருமை பெற்ற மாவட்டமாகும். கரிகால சோழன் கட்டிய கல்லணையும், காவிரியின் பரந்து விரிந்த பாசன வாய்க்கால், ஆறுகள் பசுமை நிறைந்த வயல்வெளிகள் கொண்ட சோழ மன்னன் கட்டிக் காத்த பெருமை கொண்ட தஞ்சை மாவட்டமாகும். எனவே, நீர் நிரம்பிய இம்மண்ணில் மரங்கள் நடும் விழா நீதித்துறை, நிர்வாகத் துறை, காவல் துறை இணைந்து சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சியாக சிறப்பாக நடைபெறுகிறது. இந்நீதிமன்ற வளாகத்திலே, மரங்களை தண்ணீர் ஊற்றி நாள்தோறும் பராமரிக்கிற கடைநிலை பணியாளர்களைப் பாராட்டுகிறேன். அலுவலர்கள், பொதுமக்கள் அனைவரும் வீடுகளில் மரம் வளர்ப்போம் என்ற உறுதி ஏற்க வேண்டும். மழை தரும் மரங்களை வளர்ப்பதை ஊக்குவிக்கும் வகையில் தங்கள் வீடுகளில் நடைபெறும் விழாக்களில் மரக்கன்றுகளை பரிசளியுங்கள். மரக்கன்றுகள் நடும் பணிகளை இம்மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்துகிற மாவட்ட ஆட்சியர், வனத்துறை, நெடுஞ்சாலைத்துறை, காவல்துறை அலுவலர்களையும் பாராட்டுகிறேன்" என்றார். இவ்விழாவில், மாநகராட்சி மேயர் சண்.இராமநாதன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.இராஜாராம், மாவட்ட வருவாய் அலுவலர் தெ.தியாகராஜன், சட்ட ஆலோசனைக் குழு வழக்கறிஞர் சந்துரு (எ) சந்திரசேகரன், மாவட்ட வன அலுவலர் எம்.ஆனந்த்குமார், மாநகராட்சி ஆணையர் க.கண்ணன், கோட்டப் பொறியாளர் (நெடுஞ்சாலை துறை) செந்தில்குமார், வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஆர்.திராவிடச் செல்வன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிறைவாக, சார்பு நீதிமன்ற நீதிபதி மற்றும் சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர் பி.குமார் நன்றி கூறினார்.
Next Story

