கோவை: உதிரப்போக்கினால் கல்லூரி மாணவி பரிதாபமாக உயிரிழப்பு !

X
கோவை மாவட்டம் வால்பாறை அருகே முருகாளி எஸ்டேட்டைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் அதிக உதிரப்போக்கு காரணமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வால்பாறை அரசு கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த அந்த மாணவி, நேற்று ரொட்டிக்கடை பகுதியைச் சேர்ந்த தனது நண்பர் கார்த்தி என்பவரின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு திடீரென அதிக இரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. உடனடியாக நண்பர் கார்த்திக் மாணவியை வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே மாணவி உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் பரிசோதனைக்குப் பின் தெரிவித்தனர். இதையடுத்து, மாணவியின் உடல் உடற்கூறாய்வுக்காக நேற்று கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட தகவலின்படி, உயிரிழந்த மாணவி பிறக்கும் போதே இதயம் வலது புறத்தில் இருந்ததாகவும், அவர் உட்கொண்டு வந்த மருந்துகளால் மாதவிடாய் காலத்தில் அதிக உதிரப்போக்கு ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும், உடற்கூறாய்வு முடிவுகள் வந்த பின்னரே உண்மை நிலை தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் வால்பாறை பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வால்பாறை காவல் ஆய்வாளர் ஆனந்தகுமார் தலைமையில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story

