வெள்ளகோவிலை சேர்ந்த சிறுமியை திருமணம் செய்த இளைஞன் கைது

வெள்ளகோவில் வேலகவுண்டன்பாளையத்தில் குடியிருந்து வருபவர் ராஜா. இவருடைய மகன் நித்தீஷ் (வயது 21). இவர் மினி ஆட்டோ, கார்களுக்கு ஆக்டிங் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். வெள்ளகோவில் காங்கேயம் சாலையை சேர்ந்த ஒரு மினி சரக்கு ஆட்டோ உரிமையாளரிடம் அடிக்கடி வேலைக்கு சென்றுள்ளார். அப்போது பள்ளிக்கூடத்தில் படிக்கும் அவரின் பேத்தியிடமும் செல்போன் மூலம் பேசி பழகி வந்துள்ளார். தற்போது 12-ஆம் வகுப்பு படிக்கும் 17 வயதான அந்த மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி இரண்டு நாட்களுக்கு முன்பு மாணவியை பொள்ளாச்சி ஒரு கோவிலுக்கு அழைத்துச் சென்று திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், மாணவியை தேடி வந்த வெள்ளகோவில் போலீசார் இருவரையும் கண்டு பிடித்து போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தனர். பின்னர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நித்தீஷை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மாணவி பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார். நிதிஷ் மீது இதற்க்கு முன்னரே வேறு காவல் நிலையத்தில் போக்சோ வழக்கு உள்ளதாக கூறப்படுகின்றது. மேலும் திருமணத்திற்கு உடந்தையாக இருந்தவர்கள் குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. பள்ளி படிக்கு 17 வயது மாணவியை ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்தது வெள்ளகோவில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story

