தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு

X
கிறிஸ்தவர்கள் தற்போது 40 நாள் தவக்காலம் கடைபிடித்து வருகிறார்கள். சாம்பல் புதன் அன்று தொடங்கிய இந்த தவக்காலம் வருகிற 20-ந் தேதி ஈஸ்டர் பண்டிகையன்று நிறைவடைகிறது.இந்த 40 நாள் தவக்காலத்தில் கிறிஸ்தவர்கள் உபவாசம் இருந்து பயபக்தியுடன் கிறிஸ்தவ ஆலயங்களில் வழிபாடு நடத்தி வருகிறார்கள். இந்த தவக்காலத்தில் ஏதாவது ஒரு முறை சாப்பிடாமல் இருக்கிறார்கள். அதன் தொடர்ச்சியாக இந்த வாரம் புனித வாரமாக அனுசரிக்கப்படுகிறது. கடந்த திங்கட்கிழமை முதல் இன்று வரை புனித வாரம் ஆகும். நேற்று பெரிய வியாழன் கடைபிடிக்கப் பட்டது. பெரிய வியாழன் அன்று இயேசு கிறிஸ்து, தனது சீடர்களின் காலை கழுவி இரவில் போஜனம் மேற்கொள்வார். இதையொட்டி ஈரோட்டில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் நேற்று இரவு சிறப்பு ஆராதனை நடந்தது.இயேசு கிறிஸ்து சிலுவை யில் அறையப்பட்ட தினமான புனித வெள்ளி தினம் இன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு 7 வார்த்தைகளை கூறினார். அந்த 7 வார்த்தைகளை வைத்து கிறிஸ்தவ தேவாலயங்களில் இன்று வழிபாடு நடத்தப்பட்டது. புனித வெள்ளியொட்டி இன்று கிறிஸ்தவர்கள் பெரும் பாலானோர் வெள்ளை ஆடை அணிந்து கிறிஸ்தவ ஆலயத்துக்கு வந்து சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். சிறப்பு ஆராதனைகளும் நடந்தது. இன்று இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாள் என்பதால் கிறிஸ்தவர்கள் பலரும் உணவு அருந்தாமல் கிறிஸ்தவ தேவாலயத்துக்கு வந்தனர். இதையடுத்து அவர்களுக்கு இன்று மதியம் கிறிஸ்தவ ஆலயங்களில் கஞ்சி, பன், பிரட் ஆகியவை உணவாக வழங்கப்பட்டன. ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் உள்ள சிஎஸ்ஐ தேவாலயம், ஸ்டேட் பேங்க் ரோட்டில் உள்ள புனித அமலானை மற்றும் பல்வேறு தேவாலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினமான ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அன்று அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடு மற்றும் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறுகிறது.
Next Story

