மாயமான கிளியை கண்டுபிடித்தது உரிமையாளர் மகிழ்ச்சி

X
ஈரோடு மாவட்டம் சித்தோடு இந்திரா நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (50). பால் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தின் உரிமையாளரான இவர் தனது வீட்டில் ஆப்பிரிக்கன் கிரேட் பாரட் கிளியினை நெல்சன் என பெயரிட்டு கடந்த ஒரு வருடமாக வளர்த்து வருகிறார். மிகவும் அன்போடும் பாசத்தோடும் வளர்த்து வந்த இந்த கிளி கடந்த 4 நாட்களுக்கு முன்பு திடீரென மாயமானது. இதனால் அதிர்ச்சி அடைந்த சதீஷ்குமார் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும் கிளியை கண்டுபிடிக்க முடியவில்லை. பிற பறவைகளைப் போல் இயல்பாக வாழப்பழகாத இக்கிளியின் நிலையை எண்ணி வேதனையில் இருந்துள்ளார்.இது தொடர்பாக நண்பர்களிடம் தெரிவித்ததை தொடர்ந்து கிளியின் படத்தை போட்டு சமூக வலைத்தளங்களில் காணவில்லை என அறிவிப்பு செய்யப்பட்டது. மேலும் பேசும் பறவையான இக்கிளியை கண்டுபிடித்தால் சன்மானம் வழங்கப்படும் எனவும் பேஸ்புக், வாட்ஸ்- அப் குழுக்களில் தகவல் வெளியானது. இருந்தாலும் இரு நாட்கள் கிளி தொடர்பாக எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் டெக்ஸ்வேலி அருகே நொச்சிபாளையம் மாரியம்மன் கோவில் அருகே மரத்தில் இக்கிளி அமர்ந்து உள்ளதை சதீஷ்குமாரின் உறவினரான தீபக் என்பவர் பார்த்துள்ளார். இது குறித்து சதீஷ்குமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்பகுதிக்கு விரைந்து வந்த சதீஷ்குமார் கிளியை பார்த்ததும் நிம்மதி பெருமூச்சு விட்டார். வழக்கமாக அழைப்பது போன்று கிளியை அழைத்த போது மரத்திலிருந்து பறந்து வந்து அவரது கையில் அந்த கிளி அமர்ந்தது. இதனால் மகிழ்ச்சி அடைந்த சதீஷ்குமார் கிளியுடன் வீடு திரும்பினார்.
Next Story

