கொளுத்தும் வெயிலிலும் கடமை செய்த மாவட்ட ஆட்சியர்
பெரம்பலூர் மாவட்டம் நகர்ப்புற பகுதிகளுக்கு வீட்டுமனை வழங்கும் சிறப்பு திட்டத்தின் கீழ் அரணாரை, திருநகர், துறைமங்கலம் ஆகிய பகுதிகளில், வீட்டுமனை பட்டா வழங்குவது தொடர்பாக பயனாளிகளின் வீடுகளுக்கே மாவட்ட ஆட்சித் தலைவர் கிரேஸ் பச்சாவ் நேரில் சென்று ஆய்வு பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட அரணாரை, திருநகர், துறைமங்கலம் ஆகிய பகுதிகளில் நகர்ப்புற பகுதிகளுக்கு வீட்டுமனை வழங்கும் சிறப்புத் திட்டத்தின் கீழ் வீட்டுமனைப் பட்டா வழங்க தேர்வு செய்யப்படவுள்ள பயனாளிகளின் வீடுகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் இன்று (19.04.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நகர்ப்புற பகுதிகளில் ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக வீடு கட்டி வாழும் மக்களுக்கு அவர்களுடைய வாழ்வாதார மேம்பாட்டிற்காக அரசின் சில வரைமுறைகளுக்கு உட்பட்டு, பட்டா வழங்கிட அறிவுறுத்தியுள்ளார்கள். அதனடிப்படையில், அரணாரை அறிஞர் அண்ணா நகர் தெருவில் ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் குடியிருக்கும் 4 நபர்களும், திருநகர் பகுதியில் உள்ள 45 நபர்களும், துறைமங்கலம் பகுதியில் உள்ள 4 நபர்களும் அரசின் விதிகளுக்குட்பட்டு தகுதியுடையவர்களா என்பது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் சென்று ஆவணங்களைப் பார்வையிட்டு கள ஆய்வு செய்தார். இந்த ஆய்வில், குடியிருப்புவாசிகளிடம், நீண்ட வருடங்களாக வசிப்பதற்கான வீட்டு வரி ரசீது, மின் இணைப்பு ரசீது, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் வருமான வரம்பு உள்ளிட்ட ஆவணங்களை சரி பார்த்து ஆய்வு செய்தார். ஆவணங்கள் சரியாக உள்ளவர்களுக்கு அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு வீட்டுமனை வரன்முறைபடுத்தி, நகர்ப்புற பகுதிகளில் வீட்டுமனை வழங்கும் சிறப்பு திட்டத்தின் கீழ் விரைவில் பட்டா வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் திரு.மு.வடிவேல் பிரபு, சார் ஆட்சியர் சு.கோகுல் இ.ஆ.ப., மாவட்ட ஆட்சியின் நேர்முக உதவியாளர் (நிலம்) சு.சொர்ணராஜ் மாவட்ட வழங்கல் அலுவலர் சுந்தரராமன், உதவி ஆணையர் (நில அளவை) பெரம்பலூர் வட்டாட்சியர் பாலசுப்ரமணியன் உள்ளிட்ட வருவாய் துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
Next Story




