தர்மபுரியில் கலைஞர் கைவினை திட்டம் தொடக்க விழா
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நேற்று காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர், சேக்கிழார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் சார்பில், கலைஞர் கைவினைத் திட்டத்தை தொடங்கி வைத்து, 8,951 பயனாளிகளுக்கு 34 கோடி ரூபாய் மானியத்துடன் 170 கோடி ரூபாய் கடன் ஒப்புதல் ஆணைகளை வழங்கினார்கள்.இதனை தொடர்ந்து தருமபுரி ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் காணொளி காட்சியின் வாயிலாக ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியில் தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் சதீஸ், இ.ஆ.ப., நேற்று கலந்துகொண்டு, பார்வையிட்டார்கள். இந்நிகழ்ச்சிக்கு தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.மணி அவர்கள் முன்னிலை வகித்தார்.தமிழ்நாடு அரசால் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் கைவினை கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையிலும், கைவினை கலைஞர்களை தொழில் முனைவோர்களாக உருவாக்கிடும் நோக்கத்துடனும் “கலைஞர் கைவினைத் திட்டம் (KKT)” என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் கைவினை கலைஞர்களுக்கு மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் உதவியும் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சியும் வழங்கப்படும். கலைஞர் கைவினைத் திட்டத்தில் அதிகபட்சமாக ரூ.50,000/- வரை 25 சதவீதம் மானியத்துடன் கூடிய ரூ.3.00 இலட்சம் கடனுதவியும், 5 சதவீதம் வரை வட்டி மானியமும் வழங்குவதோடு, தொழில் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும். இத்திட்டத்தில் விண்ணப்பிக்க 35 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். கைவினைத் தொழில் மற்றும் கைவினைக் கலைகளில் ஈடுபட்டு வரும் மக்கள் பயனடையும் வகையில், புதிய தொழில் தொடங்கவும், செய்யும் தொழிலை விரிவாக்கம் செய்திடவும் கடனுதவி வழங்கப்படும். கட்டட வேலைகள், மர வேலைப்பாடுகள், பாரம்பரிய முறையில் ஜவுளி அச்சிடுதல், தோல் கைவினைபொருட்கள், காலணிகள் தயாரித்தல், மீன் வலை தயாரித்தல், நகை செய்தல், சிகையலங்காரம், அழகுக்கலை, துணி நெய்தல், போன்ற 25 வகையான கைவினைத் தொழில்கள் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தகுதியுடைய தொழில்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற www.msmeonline.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பான மேலும் விவரங்களுக்கு, “பொது மேலாளர், மாவட்டத் தொழில் மையத்தை அணுகி பயன்பெறலாம் என தெரிவித்தார்.
Next Story





