நம்ம ஊரு கதை' கட்டுரை போட்டி மாணவ-மாணவியருக்கு பரிசு வழங்கல்

X
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 686 இல்லம் தேடி கல்வி மையங்கள் செயல்பட்டு வருகிறது. இம்மையங்களில் பயிலும் மாணவ- - மாணவியருக்காக ‛நம்ம ஊரு கதை' என்ற தலைப்பிலான கட்டுரை போட்டி நடந்தது. போட்டியில், இல்லம் தேடி கல்வி மாணவர்கள் பங்கேற்றனர். இதில், குறைந்த பட்சம் ஒரு மையத்திற்கு 20 பேர் என, ஏழு இல்லம் தேடி கல்வி மையங்களில் உள்ள 124 மாணவ -மாணவியர் தங்களது ஊரின் சிறப்பு, வரலாறு, ஆளுமைகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் ‛நம்ம ஊரு கதை' சார்ந்த கட்டுரைகளை வட்டார அளவில் சமர்பித்தனர். மாவட்ட அளவில் தொகுக்கப்பட்டு முதல் ஏழு இடங்களை பிடித்து வெற்றி பெற்ற மாணவ-மாணவியருக்கும், இல்லம் தேடி கல்வி மைய தன்னார்வலர்களுக்கும் பரிசளிப்பு விழா நேற்று நடந்தது. இதில், மாவட்ட முதன்மைகல்வி அலுவலர் வெற்றி செல்வி, முதல் ஏழு இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசு மற்றும் கேடயம் வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில், மாவட்ட உதவி திட்ட அலுவலர் வெங்கடேசன், வட்டார கல்வி அலுவலர் ரவி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பொன்வேல், வட்டார வளமைய மேற்பார்வையாளர் குளோரி எப்சிபா, ஆசிரியர் பயிற்றுநர்கள், தன்னார்வலர்கள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Next Story

