சிலம்பாட்டம் பயிற்சி அளிக்கும் காவலர்
மதுரை மாவட்டம் மேலூர் அருகே கொடுக்கம்பட்டியை சேர்ந்தவர் யாசின். இவர் தமிழ்நாடு காவல்துறையில் காவலராக, திருச்சி ரயில்வே ஸ்டேஷன் அருகே வேலை பார்த்து வருகிறார். விடுமுறைக்கு ஊர் திரும்பும் இவர், தனது ஊர் இளைஞர்கள் மது மயக்கத்தில் சுற்றுவதை பார்த்து வருத்தமடைந்தார். அவர்களை இனி மாற்றுவதை விட, வருங்கால சந்ததிகளான குழந்தைகளை நல்வழிப்படுத்த எண்ணினார். இதனால் கொடுக்கம்பட்டியைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமிகளை ஒருங்கிணைத்து அவர்களுக்கு வார இறுதியில் சிலம்பாட்ட பயிற்சி, பயிற்சியாளர் மூலம் வழங்க தொடங்கினார். தனது விடுமுறை தினங்களில் மாணவர்களை அழைத்துக் கொண்டு வரலாற்று சிறப்புமிக்க பகுதிகளில் அவர்களுக்கு சிலம்பாட்ட பயிற்சி வழங்குவதுடன் வாழ்க்கை நெறிமுறைகளை குறித்து எடுத்துரைத்து வருகிறார். கடந்த ஞாயிறு சிவகங்கை மாவட்டத்திற்கு அழைத்து சென்ற அவர், இந்த வாரம் மேலூர் அருகே கீழையூரில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள சமணப் படுகைகளுக்கு அழைத்து வந்து மாணவர்களுக்கு சுற்றிக் காட்டி விளக்கி, அங்கு பயிற்சியும் அளித்தார். மாணவர்களின் மனதை தேவையற்ற வேறு ஏதிலும் செலுத்தாமல் படிப்பு, விளையாட்டுத் துறைகளில் செம்மைப்படுத்துவதற்காக இதனை தொடர்ந்து செய்ய உள்ளதாக காவலர் யாசின் தெரிவித்தார்.
Next Story




