தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவிக்கு, பேராவூரணி எம்எல்ஏ நா.அசோக்குமார் பாராட்டு
மாநில மற்றும் தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்று, வெற்றி பெற்று வரும் பேராவூரணி தொகுதியைச் சேர்ந்த மாணவியை சட்டமன்ற உறுப்பினர் நா. அசோக்குமார் சால்வை அணிவித்து, பாராட்டி ரொக்கப் பரிசு வழங்கினார். தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே அம்மணிசத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தராஜன் - புஷ்பராணி தம்பதி. விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இவர்களுக்கு, வித்யா ஸ்ரீ (20) என்ற மகளும், சிவவர்மன் (15) என்ற மகனும் உள்ளனர். மாணவி வித்யா ஸ்ரீ எல்கேஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை வீரியங்கோட்டை - உடையநாடு ராஜராஜன் பள்ளியிலும், ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், 11-ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பேராவூரணி டாக்டர் ஜே சி குமரப்பா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும் படித்தார். தற்போது திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி செங்கமலத்தாயார் மகளிர் கல்லூரியில் பிஎஸ்சி இயற்பியல் மூன்றாமாண்டு படித்து வருகிறார். அவரது தம்பி சிவவர்மன் டாக்டர் ஜே.சி.குமரப்பா பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். மாணவி வித்யாஸ்ரீ தேசிய மாணவர் படையில் (என்சிசி) ஆர்வமுடன் இணைந்து, அதன் மூலம் துப்பாக்கி சுடும் போட்டியில் மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார். கடந்த 2023 ஆம் ஆண்டு, மதுரையில் நடைபெற்ற என்சிசி 48ஆவது மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்று, 6 தங்கம், 1 வெண்கலம் வென்றார். அதனைத் தொடர்ந்து 2023 ஆம் ஆண்டு மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான 32 வது துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்று, ஒரு தங்கம் ஒரு வெண்கலம் வென்றார். 2024 ஆம் ஆண்டு கோவையில் நடைபெற்ற 49ஆவது மாநில அளவிலான போட்டியில் பங்கேற்று 2 வெண்கலம் பெற்றார். 2024 ஆம் ஆண்டு சென்னை சராகிரி துப்பாக்கி சூடும் மையத்தில் நடைபெற்ற 15ஆவது தென் மண்டல அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்டு, அதன் மூலம் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றார். பின்னர், டெல்லியில் பிப்ரவரி 2025-இல் கர்னிசிங் சூட்டிங் ரேஞ்ச் தேசிய ட்ரையல்ஸ் 1, 2 போட்டியில் வெற்றி பெற்றுள்ளார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள மாணவி வித்யா ஸ்ரீயை, ஞாயிறன்று காலை பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் அழைத்து சால்வை அணிவித்து, ரொக்கப் பரிசு வழங்கி பாராட்டினார். துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்று பல்வேறு வெற்றிகளை பெற்றுள்ள மாணவி வித்யாஸ்ரீயை அப்போதைய திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ, தேசிய மாணவர் படை உயர் அலுவலர்கள் பாராட்டியுள்ளனர். கடந்த 2024 ஆம் ஆண்டு 49 ஆவது மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற போது, தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார். இது குறித்து மாணவி வித்யாஸ்ரீ கூறுகையில், சாதாரண விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த நான், ஜூனியர் விமன் கேட்டகிரியில் 50 மீட்டர் ரைபிள்ஸ் துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்று வருகிறேன். செங்கமலத்தாயார் கல்லூரி நிர்வாகம், என்சிசி உயர் அலுவலர்கள் நான் போட்டியில் பங்கேற்க பல்வேறு வகைகளில் உதவி செய்து வருகின்றனர். வருடா வரும் வருடம் நடைபெறும் போட்டியில் பங்கேற்க, அதற்கான நவீன துப்பாக்கி மற்றும் உபகரணங்கள் வாங்க எனக்கு தமிழ்நாடு அரசு உதவி செய்ய வேண்டும். எதிர்காலத்தில் ஐபிஎஸ் அலுவலராக மக்கள் சேவை செய்வதே என் விருப்பம்" என மாணவி தெரிவித்துள்ளார்.
Next Story




