ரயில்வே வளர்ச்சி திட்டங்கள் குறித்து தஞ்சை எம்.பி முரசொலியிடம் ரயில் உபயோகிப்போர் சங்கம் கோரிக்கை
தெற்கு ரயில்வே சார்பில், திருச்சி ரயில்வே கோட்ட பகுதியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளும், ரயில்வே வளர்ச்சி பற்றிய ஆலோசனைக் கூட்டம் எதிர்வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி புதன் கிழமை திருச்சியில் நடைபெற உள்ளது இந்த கூட்டத்தில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் , நாடாளுமன்ற உறுப்பினர்கள், திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் மற்றும் ரயில்வே உயர் அலுவலர்கள் கலந்து கொள்கின்றனர். இந்நிலையில், மயிலாடுதுறை - காரைக்குடி ரயில் பாதையில் இயக்க வேண்டிய ரயில்கள் மற்றும் நிறைவேற்றப்பட வேண்டிய அடிப்படைத் தேவைகள் பற்றிய கோரிக்கை மனுவை பட்டுக்கோட்டை ரயில் உபயோகிப்போர் சங்கத்தின் தலைவர் வ.விவேகானந்தம், செயலாளர் கு.முகேஷ், துணை செயலாளர் ப.ஆத்மநாதன் ஆகியோர் தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலியை சனிக்கிழமை தஞ்சாவூரில் நேரில் சந்தித்து கொடுத்தனர் மேலும், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி ப.சிதம்பரம், ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ்கனி, நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் வை.செல்வராஜ், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் சுதா ஆகியோருக்கு அஞ்சல் மூலம் அனுப்பி உள்ளனர். அந்த கோரிக்கை மனுவில், "தற்போது புதிதாக இயங்கி வரும் தாம்பரம் - ராமேஸ்வரம் - பாம்பன் புதிய விரைவு ரயிலுக்கு (16103/16104) முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பேராவூரணியில் நிறுத்தம் வழங்க வேண்டும். மயிலாடுதுறை- காரைக்குடி ரயில் பாதையில் மீட்டர் கேஜ் காலத்தில் இயங்கிய அனைத்து பயணிகள் ரயில்களையும் இயக்க வேண்டும். காலை நேரத்தில் காரைக்குடியில் இருந்து மயிலாடுதுறைக்கு பயணிகள் ரயிலை இயக்க வேண்டும். பகல் நேரத்தில் சென்னைக்கு செல்ல மயிலாடுதுறையில் சோழன் அதிவிரைவு ரயிலுக்கு (22675/22676)இணைப்பு ரயிலாக தெற்கு ரயில்வேயால் 2022 ஆம் ஆண்டு முன் மொழிவு செய்யப்பட்ட காரைக்குடி மயிலாடுதுறை பயணிகள் ரயிலை (16858/16860) இயக்க வேண்டும். திருவாரூர் காரைக்குடி (06197/06198)பயணிகள் ரயில் மற்றும் திருவாரூர் பட்டுக்கோட்டை பயணிகள் ரயில்(06851/06852) ஆகியவற்றை மெயின் லைனில் தொடர்ந்து பயணம் செய்ய வசதியாக மயிலாடுதுறை சந்திப்பில் இருந்து இயக்க வேண்டும். செகந்திராபாத் ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு விரைவு ரயிலை(07695/07696) நிரந்தரமாக இயக்க வேண்டும். திருநெல்வேலி- சென்னை எழும்பூர் வாராந்திர சிறப்பு விரைவு ரயிலை (06070/06069) மீண்டும் இயக்க வேண்டும். தென் மாவட்டங்களுக்கு சென்று வர மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி காரைக்குடி, மானாமதுரை வழியாக மதுரைக்கு பயணிகள் ரயிலை இயக்க வேண்டும். பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில் பார்சல் புக்கிங் அலுவலகத்தை திறக்க வேண்டும். பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில் குளிர்சாதன வசதியுடன் கூடிய பயணிகள் ஓய்வெடுக்கும் அறைகளை அமைத்திட வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது இந்த கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்ட தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் அனைத்து கோரிக்கைகளையும் ரயில்வே வளர்ச்சி கூட்டத்தில் வலியுறுத்தி நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
Next Story



