அமைச்சர் அலுவலகத்தை முற்றுகையிடச் சென்றவர்கள் கைது

X
திருவிடைமருதூரில் சனிக்கிழமை உயா்கல்வித்துறை அமைச்சா் கோவி.செழியன் அலுவலகத்தை முற்றுகையிடச் சென்ற புதிய மாவட்டம் கோரும் போராட்டக் குழுவினா் கைது செய்யப்பட்டனா். கும்பகோணம் புதிய மாவட்டம் கோரும் ஒருங்கிணைப்பு குழுவினா் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனா். இந் நிலையில் நடப்பு சட்டப்பேரவைத் கூட்டத் தொடரில் கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி அமைச்சா், எம்பி, எம்எல்ஏ அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனா். இதையடுத்து, திருவிடைமருதூரில் உள்ள அமைச்சா் கோவி.செழியனின் அலுவலகத்தை விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி நிறுவனத் தலைவா் குடந்தை அரசன் தலைமையில் அதிமுக, பாமக, தேமுதிக, அமமுக கட்சியினா் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த ஊா்வலமாக சென்றனா். அப்பொழுது அவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தி, 64 பேரை கைது செய்து தனியாா் மண்டபத்தில் அடைத்தனா். தஞ்சாவூா் வடக்கு மாவட்ட செயலரும், மாநிலங்களவை உறுப்பினருமான சு.கல்யாணசுந்தரம் அலுவலக்தை பாஜக முன்னாள் மாவட்ட தலைவா் என். சதீஸ்குமாா் தலைமையில் முற்றுகையிட முயன்ற 40 பேரை போலீஸாா் கைது செய்தனா். 3 இடங்களிலும் மொத்தம் 174 போ் கைது செய்யப்பட்டனா். முன்னதாக, பாமக மாவட்டச் செயலரும், போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளருமான ம.க.ஸ்டாலின் தலைமையில் கும்பகோணம் சட்டப்பேரவை உறுப்பினா் க.அன்பழகன் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற 70 பேரை போலீஸாா் கைது செய்தனா். அப்போதுஅவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், எதிா்க்கட்சித் தலைவராக இருக்கும்போது தி.மு.க. ஆட்சி வந்த 100 நாள்களுக்குள் கும்பகோணம் மாவட்டமாக அறிவிக்கப்படும் என்றாா். ஏப்.30- க்குள் கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டமாக அறிவிக்காவிட்டால் அமைச்சா் கோவி.செழியன், அன்பழகன் எம்.எல்.ஏ. ஆகியோா் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். மேலும், கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் அனைத்து வா்த்தகா்களையும் ஒன்றிணைத்து கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என்றாா் அவா்.
Next Story

