கோவை: விசைத்தறியாளர்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது !

கூலி உயர்வு கோரிக்கையை முன்வைத்து விசைத்தறியாளர்கள் நடத்திய காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.
கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் கூலி உயர்வு கோரிக்கையை முன்வைத்து விசைத்தறியாளர்கள் நடத்திய காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. நேற்று அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தலைமையில், அமைச்சர் கயல்விழி, செந்தில் பாலாஜி ஆகியோருடன் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. பேச்சுவார்த்தையில், சோமனூர் பகுதி விசைத்தறியாளர்களுக்கு 15 சதவீதமும், திருப்பூர் மாவட்ட விசைத்தறி ரகங்களுக்கு 10 சதவீதமும் கூலி உயர்வு வழங்க ஜவுளி உற்பத்தியாளர்கள் ஒப்புக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து, ஐந்து நாட்களாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வந்த 12 விசைத்தறியாளர்கள் பழரசம் அருந்தி போராட்டத்தை கைவிட்டனர். சங்கத் தலைவர் பூபதி, இன்று முதல் விசைத்தறி கூடங்கள் வழக்கம் போல் இயங்கும் என்று தெரிவித்தார். இந்த போராட்டத்தின் காரணமாக சுமார் ரூ.1,000 கோடி வருமான இழப்பு ஏற்பட்டதோடு, காடா துணிகள் தேக்கமடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. மாவட்ட ஆட்சியர்களுடன் நடைபெற்ற பலகட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில், அமைச்சர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை சுமூகமான முடிவை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story