கோவை: பெட்டிக் கடைக்கு சீல் - மனமுடைந்த மூதாட்டி தற்கொலை!

கோவை: பெட்டிக் கடைக்கு சீல் - மனமுடைந்த மூதாட்டி தற்கொலை!
X
கோவை,தொண்டாமுத்தூரை சேர்ந்த மூதாட்டி, தனது பெட்டிக் கடைக்கு சீல் வைக்கப்பட்டதால் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோவை,தொண்டாமுத்தூர் அருகே கலிக்கநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த அங்கம்மாள் (60) என்ற மூதாட்டி, தனது பெட்டிக் கடைக்கு சீல் வைக்கப்பட்டதால் மனமுடைந்து நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அங்கம்மாள் காந்தி வீதியில் பெட்டிக் கடை நடத்தி வந்துள்ளார். நேற்று முன்தினம் தொண்டாமுத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரி நரசிம்மன் ஆகியோர் அவரது கடையில் சோதனை நடத்தினர். அப்போது, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 224 கிராம் புகையிலைப் பாக்கு பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அதிகாரிகள் கடையை பூட்டி சீல் வைத்துச் சென்றனர். தனது வாழ்வாதாரமாக இருந்த பெட்டிக் கடைக்கு சீல் வைத்தது அங்கம்மாளுக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியது. இது அவமானமாக கருதிய அவர், இரவு முழுவதும் புலம்பியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று தனது வீட்டில் மூதாட்டி மின்விசிறியில் சணல் கயிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்து தகவலறிந்த தொண்டாமுத்தூர் போலீசார், அங்கம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அங்கம்மாளின் மகன் ஆனந்த் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story