கோவை: அதிமுக-பாஜக கூட்டணிக்கு எதிராக துண்டு பிரசுரம் !
அதிமுக-பாஜக கூட்டணி தமிழ்நாட்டிற்கு செய்த துரோகங்களின் பட்டியல் என்ற தலைப்பில் திமுக ஐடி விங் சார்பில் கோவை காந்திபுரம் பகுதியில் பொதுமக்களுக்கு நேற்று துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. இந்த துண்டு பிரசுரத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பிரதமர் மோடியின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. அதில், அதிமுக-பாஜக கூட்டணி தமிழ்நாட்டிற்கு செய்த பாதகங்களை பட்டியலிட்டுள்ளனர். குறிப்பாக, நீட் தேர்வை தமிழ்நாட்டில் அனுமதித்து மாணவர்களின் உயிரைப் பறித்தது, மின்சார கட்டண உயர்வுக்கு காரணமான உதய் மின் திட்டத்திற்கு ஆதரவு, மூன்று வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு, இஸ்லாமியர்களை இரண்டாம் தர குடிமக்களாக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு, சிறுபான்மை மக்களுக்கு எதிரான CAA சட்டத்திற்கு ஆதரவு, இந்தி திணிப்பு, நிதி பகிர்வில் பாரபட்சம், கல்வி நிதி மறுப்பு மற்றும் தொகுதி மறு சீரமைப்பு போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை திமுக முன்வைத்துள்ளது. மேலும், வஞ்சக பாஜக- துரோக அதிமுக கூட்டணியிடமிருந்து தமிழ்நாட்டைப் பாதுகாப்போம்! #NEETதுரோகிADMK என்ற வாசகங்களுடன் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. பாஜக அரசின் அனைத்து துரோகங்களுக்கும் துணை நின்று கூட்டணி அமைத்துள்ள அதிமுகவை முத்திரையை கிழித்து விரட்டி அடிப்போம் என்று திமுக ஐடி விங் சார்பில் தெரிவித்து துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
Next Story



