முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம்

X
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, சிவகங்கை தெற்கு திமுக ஒன்றியத்தின் சார்பில் மாபெரும் மாட்டுவண்டி பந்தயம் கோலாகலமாக நடைபெற்றது. அம்பேத்கர் சிலையிலிருந்து தொடங்கி, சிவகங்கை – மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற இந்த பந்தயத்தில், பெரிய மற்றும் சிறிய மாடுகள் என இரண்டு பிரிவுகளாக போட்டி நடத்தப்பட்டது. பெரிய மாடுகளுக்கான பிரிவில் 13 ஜோடி மாடுகள், சிறிய மாடுகளுக்கான பிரிவில் 19 ஜோடி மாடுகள் என மொத்தம் 32 ஜோடி மாடுகள் பங்கேற்றன. சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த மாடுகள் இந்தப் போட்டியில் பங்கேற்றன. பெரிய மாடுகளுக்கு 8 மைல் மற்றும் சிறிய மாடுகளுக்கு 6 மைல் தூரம் எல்கையாக நிர்ணயிக்கப்பட்டது. இப்பந்தயத்தை திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெயராமன் மற்றும் நகர மன்ற தலைவர் துரை ஆனந்த் ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர். வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கும், சாரதிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. சாலையின் இருபுறங்களிலும் திரண்டிருந்த ஏராளமான பார்வையாளர்கள், சீறி பாய்ந்த மாட்டுவண்டிகளை உற்சாகத்துடன் கண்டு ரசித்து, போட்டியை ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.
Next Story

