வீடு புகுந்து திருடிய ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்

X
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த காஞ்சி கோவில், முள்ளம்பட்டி கோர்ட் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (60). ஈரோடு நீதிமன்றத்தில் டைபிஸ்ட்டாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர் தனது குடும்பத்துடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள மகன் வீட்டிற்கு சென்று விட்டார். பூட்டிய நிலையில் இருந்த வீட்டின் மேல் மாடி கதவு கடந்த சில நாட்களுக்கு முன்பு திறந்து கிடப்பதாக அக்கம் பக்கத்தினர் ராஜேந்திரனுக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அவசர அவசரமாக வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் மொட்டை மாடி கதவு உடைக்கப்பட்ட நிலையில் படுக்கை அறையில் உள்ள பீரோ திறந்து கிடப்பதை கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்தார். பீரோவை பார்த்தபோது அதில் இருந்த ரூ.26 ஆயிரம் ரொக்க பணம், 3 விலை உயர்ந்த கைக்கடிகாரங்கள், ஒரு செல்போன் திருட்டு போனது தெரிய வந்தது. இது குறித்து காஞ்சி கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது அதில் ராஜேந்திரன் வீட்டுக்குள் வந்தவர்கள் முகம் பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் போலீசார் விசாரணையை தீவிர படுத்தினர். இந்நிலையில் இந்த கொள்ளை வழக்கு தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்டம் டெத்தேரியில் தலைமறைவாக இருந்த சென்னை துறைப்பாக்கம் கண்ணகி நகரை சேர்ந்த செல்வா (24), புஷ்பா நகர் பகுதியில் சேர்ந்த ரமேஷ் (24), காவனூர் பகுதியைச் சேர்ந்த குமார் (24), கண்ணகி நகர் பகுதியில் சேர்ந்த சக்திவேல் (29), திருவள்ளூர் பெத்தூர் வேலன் நகரைச் சேர்ந்த சிரஞ்சீவி (37) மற்றும் 15 வயது சிறுவன் என மொத்தம் 6 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் சம்பவத்தன்று கோவை ஈடிசியா சென்றபோது நெடுஞ்சாலை ஓரம் உள்ள ராஜேந்திரன் வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்டு துணிகர கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.
Next Story

