எம் சாண்ட் விலை உயர்வை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அடுத்த கட்டமாக பெரிய அளவில் போராட்டம் நடைபெறும் என ஒப்பந்தக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.*

X
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் எம். சாண்ட் விலை உயர்வை கண்டித்து கட்டட கட்டுமான காண்ட்ராக்டர்கள் சங்கம் சார்பில் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் சுமார் 6 ஆயிரம் கட்டட தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். விலை உயர்வை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அடுத்த கட்டமாக பெரிய அளவில் போராட்டம் நடைபெறும் என ஒப்பந்தக்காரர்கள் தெரிவித்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் தளவாய்புரம் சுற்று வட்டார பகுதிகளில் 150 கட்டட கட்டுமான ஒப்பந்தக்காரர்கள் உள்ளனர். இவர்களிடம் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். செங்கல் சூளைக்கு பயன்படும் மண்ணுக்கு அதிக அளவு பணம் வசூல் செய்யப்படுவதால் செங்கல் விலை உயர்ந்துள்ளது. இந்த நிலையில் கட்டுமானத்திற்கு மணல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் தற்போது எம்சாண்ட் மட்டுமே கட்டுமானப் பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நான்காயிரம் ரூபாய் இருந்த ஒரு யூனிட் எம்.சாண்ட் தற்போது 9 ஆயிரம் ரூபாயாக உயர்ந்து விட்டதாக ஒப்பந்தக்காரர்கள் புகார் தெரிவித்தனர். ராஜபாளையத்தை சுற்றி 20 மணல் குவாரிகள் உள்ள நிலையில், குறிப்பிட்ட நான்கு குவாரிகள் மட்டுமே செயல்பட்டு வருவதாகவும் ஒப்பந்தக்காரர்கள் குற்றம் சாட்டினர். மாற்று பகுதியில் எம். சாண்ட் கிடைக்காத நிலையில் நான்கு குவாரிகளின் உரிமையாளர்கள் வைத்தது தான் விலை என்பதால் கட்டட பணிகள் நாளுக்கு நாள் குறைந்து வருவதாகவும் ஒப்பந்தக்காரர்கள் தெரிவித்தனர். இதனால் கட்டட தொழிலாளர்கள், ஒப்பந்தக்காரர்கள் என பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் நடுத்தர மக்கள் வீடு கட்ட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். எனவே எம் சாண்ட் விலையை குறைக்க வலியுறுத்தி இன்று ஒரு நாள் ராஜபாளையம் மற்றும் தளவாய்புரம் கட்டட கட்டுமான கான்ட்ராக்ட்டர்கள் சங்கம் சார்பில் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தால் ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட கட்டட தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். போராட்டத்தை தொடர்ந்து ஒப்பந்தக்காரர்கள் சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் எம்சாண்ட் விலையை குறைக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தங்களது கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி ஒப்பந்தக்காரர்கள் சார்பில் வட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. அரசு இந்த விஷயத்தில் தலையிட்டு விரைவில் எம்சாண்ட் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அடுத்த கட்டமாக அனைத்து தொழிலாளர்களையும் திரட்டி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெறும் என ஒப்பந்தக்காரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story

