கோவை: பணி நியமனத்திற்காக காத்திருக்கும் இடைநிலை ஆசிரியர்கள் !

X
கடந்த 12 ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்திற்காக காத்திருக்கும் ஆசிரியர்கள், தங்களது வயது மூப்பை கருத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பக் கோரிக்கை விடுத்துள்ளனர். இதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி (TNSGT) சார்பில் நேற்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. மனு அளித்த ஆசிரியர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில், கடந்த 12 வருடங்களாக இந்த ஆசிரியர் பணிக்காக நாங்கள் காத்திருக்கிறோம். தமிழகத்தில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். 2023 ஆம் ஆண்டு சுமார் 6,553 காலிப் பணியிடங்கள் இருப்பதாக அரசு தரப்பில் கூறப்பட்டது. ஆனால், அதற்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. தொடக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ள நிலையிலும், பல இடங்களில் ஆசிரியர் பணியிடங்கள் காலியாகவே உள்ளன. இதனால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. எனவே, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து காலிப் பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும். அவ்வாறு செய்தால், நாற்பது வயதிற்கு மேற்பட்ட எங்களுக்கு பணி வாய்ப்பு கிடைக்கும். எங்களது கோரிக்கைகளை பரிசீலனை செய்து அரசு நிறைவேற்றித் தர வேண்டும், என்று அவர்கள் தெரிவித்தனர்.
Next Story

