சூலூர்: மாட்டு கொட்டகை தகராறு - இளம்பெண் வெட்டிக் கொலை !
கோவை, சூலூர் அருகே மாட்டு கொட்டகையை காலி செய்வதில் ஏற்பட்ட தகராறில் ரம்யா (25) என்ற இளம்பெண் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். கொலையாளி ராஜேந்திரன் (35) கொலை செய்த அரிவாளுடன் இன்று நள்ளிரவில் காவல் நிலையத்தில் சரணடைந்தார். சூலூர் பீடம் பள்ளி கள்ளி தோட்டம் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன், தனது வீட்டின் அருகாமையில் உள்ள மாட்டு கொட்டகையை பாப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்த ரம்யாவுக்கு வாடகைக்கு விட்டிருந்தார். ரம்யாவை பார்ப்பதற்காக அடிக்கடி சிலர் வந்து செல்வது ராஜேந்திரனுக்கு பிடிக்காததால், கொட்டகையை காலி செய்யுமாறு அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக சூலூர் காவல் நிலையத்தில் புகாரும் அளிக்கப்பட்டிருந்தது. நேற்று ரம்யாவை பார்க்க வந்தவர்களை ராஜேந்திரன் தடுத்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த ராஜேந்திரன், அரிவாளால் ரம்யாவின் கழுத்தை வெட்டி படுகொலை செய்தார். பின்னர், அவர் கொலை செய்த அரிவாளுடன் காவல் நிலையத்தில் சரணடைந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ரம்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாட்டு கொட்டகை தகராறில் இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Next Story



