கோவை: காட்டுப்பன்றிகள் ஒழிப்பு மாநாடு !
வனத்திற்கு வெளியே வந்து விளைநிலங்களைச் சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளை உடனடியாகச் சுட்டுக் கொல்ல வேண்டும் என்று கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. துடியலூர் அடுத்துள்ள விஸ்வநாதபுரத்தில் நேற்று நடைபெற்ற காட்டுப் பன்றி ஒழிப்பு இரண்டாவது மாநாட்டில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வன எல்லையிலிருந்து மூன்று கிலோமீட்டர் என்ற பாகுபாடு இல்லாமல் விவசாயத்தை அழிக்கும் மற்றும் மனிதர்களைத் தாக்கும் காட்டுப் பன்றிகளை வனத்துறையினர் விரைந்து கொல்ல வேண்டும் என்று மாநாட்டில் கோரிக்கை வைக்கப்பட்டது. வனத்துறையினர் இப்பிரச்சினைக்குத் தீர்வு காணத் தவறினால், விவசாயப் பொதுமக்கள் ஒன்றிணைந்து விவசாய சங்கத்தின் தலைமையில் காட்டுப் பன்றிகளைக் கொல்வோம் என்றும் தீர்மானிக்கப்பட்டது. மேலும், அனைத்து மாவட்டங்களிலும் காட்டுப் பன்றி ஒழிப்பு மாநாடுகள் நடத்தவும், அடுத்த மாநாடு ஈரோடு மாவட்டம் புளியம்பட்டியில் மே முதல் வாரத்தில் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. காட்டுப் பன்றி தாக்குதலால் காயமடைந்தவர்களின் மருத்துவச் செலவை அரசே ஏற்க வேண்டும் என்றும், யானை உள்ளிட்ட அனைத்து வனவிலங்குப் பிரச்சினைகளுக்கும் விரைவில் தீர்வு காண வேண்டும் என்றும் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
Next Story



