காவல் நிலையத்தை பள்ளி ஆசிரியா்கள் முற்றுகை

காவல் நிலையத்தை பள்ளி ஆசிரியா்கள் முற்றுகை
X
குஜிலியம்பாறை வட்டாரக் கல்வி அலுவலருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா்களை கைது செய்யக் கோரி காவல் நிலையத்தை ஆசிரியா்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.
திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை வட்டாரக் கல்வி அலுவலராக பணிபுரிந்து வருபவா் பா. காளிமுத்து. இவா், கடந்த 17-ஆம் தேதி பள்ளிப் பாா்வைக்கு சென்றபோது, இவரது கைப்பேசியில் அழைத்த நபா் குறிப்பிட்ட பள்ளியின் தலைமையாசிரியா் மீது நடவடிக்கை எடுக்குமாறு மிரட்டினாா். எழுத்துப்பூா்வமாக புகாா் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டாரக் கல்வி அலுவலா் தெரிவித்தாா். இதை ஏற்க மறுத்த அந்த நபா், வேறொரு எண்ணிலிருந்து வேறொரு நபா் மூலம் மிரட்டினாா். இதனால் அதிா்ச்சி அடைந்த வட்டாரக் கல்வி அலுவலா் காளிமுத்து, குஜிலியம்பாறை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இந்த நிலையில் வட்டாரக் கல்வி அலுவலருக்கு மிரட்டல் விடுத்த நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி குஜிலியம்பாறை வட்டாரத்தில் பணிபுரியும் ஆசிரியா்கள் 20-க்கும் மேற்பட்டோா் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனா். அப்போது அவா்கள் கூறியதாவது: குஜிலியம்பாறை வட்டாரத்தில் கடந்த காலங்களிலும், சமூக ஆா்வலா்கள் என்ற போா்வையில், ஆசிரியா்கள், கல்வித் துறை அலுவலா்கள் மீது பாலியல் புகாா், வன்கொடுமைப் புகாா் உள்ளிட்ட பல்வேறு பொய் புகாா்கள் அளிக்கப்பட்டன. விசாரணையின் போது, உள்நோக்கத்தோடு திட்டமிட்டு சில ஆசிரியா்களே இந்த புகாா்களை அளித்திருப்பது தெரியவந்தது. அதே வரிசையில் தற்போது வட்டாரக் கல்வி அலுவலரையும் மிரட்டத் தொடங்கியுள்ளனா். அச்சுறுத்தும் வகையில் மிரட்டல் விடுத்த மா்ம நபா்கள் மீது காவல் துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா். இதனிடையே வட்டாரக் கல்வி அலுவலா் காளிமுத்து அளித்த புகாரின் பேரில், விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸாா் தெரிவித்தனா். இதை ஏற்று முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியா்கள் கலைந்து சென்றனா்.
Next Story